Crime: பிரியாணி வேட்டைக்குப்போன மாணவன்.. திருட்டு கும்பலிடம் இருந்து காப்பாற்றிய திருநங்கைகள்.. என்ன நடந்தது?
Crime: சென்னை புளியந்தோப்பில் கல்லூரி மாணவனிடம் செல்போன், வாட்சை பறித்த 3 பேரை பிடித்து திருநங்கைகள் போலீசில் ஒப்படைத்தனர்.
Crime: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கல்லூரி மாணவனிடம் செல்போன், வாட்சை பறித்த 3 பேரை பிடித்து திருநங்கைகள் போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லலீத் வர்ஷன் (18). இந்த மாணவருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து பீப் பிரியாணி சாப்பிட தனது பைக்கில் புளியந்தோப்புக்கு வந்துள்ளார். அதிகாலையில் வழி தெரியாமல் புளியந்தோப்புக்கு செல்வதற்கு பதில் நுங்கம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். பிறகு கல்லூரி மாணவன் லலீத் வர்ஷன் வழி தெரியாமல் வேறு இடத்திற்கு மாறி வந்ததை உணர்ந்தார். இதன் பின், சாலையோரம் நின்று இருந்த இளைஞர்கள் 3 பேரிடம் புளியந்தோப்புக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்போது, தனியாக பைக்கில் வந்த இளைஞரிடம் நுங்கம்பாக்கத்திற்கு வழி கூறுவது போல் நடித்து பைக் சாவியை வைத்து கொண்டு, அந்த கல்லூரி மாணவன் அணிந்து இருந்த வாட்ச் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவனை மிரட்டி அவனிடம் பணத்தை கேட்டுள்ளனர். இந்த நேரத்தில், அவ்வழியாக வந்த திருநங்கைகள் அந்த இடத்தில் நடப்பதை பார்த்தனர். ஒரு இளைஞரை மடக்கி மிரட்டி பணப் பறிப்பதை பார்த்து, அவர்களிடம் என்ன என்று கேட்டுள்ளனர். உடனே அந்த 3 பேரும், நீங்கள் சென்றுவிடுங்கள் இல்லை என்றால் உங்களிடமும் பணத்தை பறிக்க நேரிடும் என எச்சரித்தனர். அப்போது, கல்லூரி மாணவன் என்னை காப்பாற்றுங்கள்... வழி தெரியாமல் இங்கே வந்தேன் என்று கூறி அழுதுள்ளார்.
அப்போது திருநங்கைகள் 3 பேரிடமும் அந்த மாணவனை விட்டுவிடும் படி கூறினர். அதை கேட்காமல் மாவணனின் வாட்ச், செல்போனுடன் தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி, இளைஞர்கள் 3 பேரை பிடித்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்பு 3 பேரையும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்படி, 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(21), பிரசாந்த் (21), விஜயகுமார் (20) என தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவர் லலீத் வர்ஷன் அளித்த புகாரின் பேரில், மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்களிடம் இருந்து மாணவனை காப்பாற்றிய திருநங்கைகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நுங்கம்பாக்கம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.