Crime: பரிசு கூப்பன் விழுந்ததாக காவலரிடம் லட்சக்கணக்கில் மோசடி வழக்கு.. நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் கைது...!
பொதுமக்கள் சைபர்கிரைம் தொடர்பான புகார்களுக்கு cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கும்படி சைபர்கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவது போல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி செய்தி அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தென்மண்டல காவல் துறைத் தலைவர் மற்றும் நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் இவ்வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ வழிகாட்டுதல்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் தனிப்படையும் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படையும் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 23.08.2022ம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா, சித்தூரைச் சேர்ந்த முரளி(41) மற்றும் வினய்குமார்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநில குற்ற வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றது தெரியவந்ததால் அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன்சோகாசர் (32) மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒபினா ஸ்டான்லி(40) ஆகியோர் பெங்களூரில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால், ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் பெங்களூர் சென்று இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை தேடிவந்த நிலையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பெங்களூர் சென்று நைஜீரியா நாட்டை சேர்ந்த ஷ்கில்லா அட்ஜோ(26) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சைபர்கிரைம் தொடர்பான புகார்களுக்கு cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும்படி சைபர்கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்