Crime: அடுத்தடுத்து இரண்டு வீடுகள்.. 67 சவரன் நகை, பணம் கொள்ளை.. நெல்லையில் பகீர்.. காவல்துறையினர் தீவிர விசாரணை
உடனடியாக சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள கை ரேகைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
நெல்லை மாநகர் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலை அருகிலுள்ள பிபிசி காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த புதன்கிழமை தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றுள்ளார். பேத்தியின் பிறந்தநாள் விழாவை திருப்பதியில் கொண்டாடுவதற்காக அவர்கள் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீடு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக கீழே சிதறி கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டின் மாடியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள கை ரேகைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவரின் உயரம் குறைவாக இருந்ததால் அதன் வழியாக மாடிக்கு ஏறி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடிகளையும் ஆங்காங்கே தூவி சென்றுள்ளனர். பீரோ உடைக்கப்பட்டத்தில் பீரோவில் இருந்த 67 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதனிடையே செல்லத்துரை வீட்டின் எதிரே இருக்கும் மற்றொரு வீட்டிலும் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் நகைகள் ஏதும் இல்லாததால் 2000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஆசிரியர் மகாராஜன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியபோது இச்சம்வம் அரங்கேறியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இரண்டு வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் கொள்ளையர்கள் எளிதாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.