பயங்கரம்! டூவீலரில் வெடித்த நாட்டு வெடி: பெண் உடல் சிதறி பலி - புதுச்சேரியில் நிலநடுக்கம் போல் கேட்ட சத்தம்
வில்லியனூர் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக எடுத்துச் சென்ற நாட்டு வெடிமருந்து,டூ வீலரில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார்

புதுச்சேரி: வில்லியனூர் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக எடுத்துச் சென்ற நாட்டு வெடிமருந்து,டூ வீலரில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். உடன் சென்ற அவரது மருமகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டூவீலரில் எடுத்துச் சென்ற வெடிமருந்து வெடித்து பெண் பலி
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரினா (52). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், தனது மருமகன் பாண்டியனுடன் (45) இணைந்து நேற்று இரவு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு பன்றி வேட்டைக்காகச் சென்றுள்ளார்.
வேட்டைக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்
காட்டுப்பன்றிகள் தாக்க வரும்போது அவற்றின் மீது வீசி நிலைகுலையச் செய்வதற்காக, அதிக வீரியம் கொண்ட நாட்டு வெடிமருந்துகளை இவர்கள் ஒரு பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். வேட்டையை முடித்துவிட்டு இன்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். கூடப்பாக்கம் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் வைத்திருந்த வெடிமருந்து உராய்வு காரணமாகவோ அல்லது அழுத்தம் காரணமாகவோ பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நடுரோட்டில் வெடித்த வெடிகுண்டு
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஜெரினா, வெடிச்சத்தத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டியனின் கால்களில் தீப்பிடித்து எரிந்தது. நிலைகுலைந்த அவர் சாலையிலேயே மயங்கி விழுந்தார். வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வில்லியனூர் போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஜெரினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளைக் கையாண்டதே இந்த உயிர் இழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















