Crime: கோவையில் பட்டப்பகலில் காரில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு - கொள்ளையர்கள் 2 பேர் கைது
ஒருவர் காரின் முன்பக்க ஜன்னலை திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார்.
கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் பணி காரணமாக ராஜ்குமார் நேற்று முன் தினம் காலை நடைபயிற்சிக்கு வராததால் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் காரின் முன்பக்க ஜன்னலை திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்த போதிலும், தனது இருகைகளாலும் நகையை இறுக்க பற்றிக்கொண்டார். மேலும் அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
எனினும் அடையாளம் தெரியாத நபர்கள் நகையை பறிக்க முயன்றபோது கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடைய நகை பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கௌசல்யா நடை பயிற்சி செய்தபோது, பின்னால் வாகன பதிவெண் இல்லாத காரில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் செயினை பறிக்கும் போது காரின் கீழ் கௌசல்யா விழும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் நகை பறிக்க முயன்ற அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையாளர் சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஜி.வி. ரெசிடெண்சி பகுதியில் கெளசல்யா கழுத்தில் இருந்த செயின் பறிக்க முயற்சி செய்தது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை விமான நிலையம் பின்புறம் இருந்த அபிஷேக் குமார், சக்திவேல் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த அபிஷேக் ஸ்விக்கி ஊழியராக உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார். இவரும் தர்மபுரியை சேர்ந்த சக்திவேல் தனது காரில் திட்டமிட்டு வாகன பதிவெண்களை அகற்றிவிட்டு நகை பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளனர். அபிஷேக் குமார் மீது ஏற்கனவே நகை பறிப்பு வழக்குகள் உள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த கார் சென்ற பகுதிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். நகைப்பறிப்பு சம்பவங்களை தடுக்க ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பைக்கில் வந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளே குற்றவாளிகளை பிடிக்க முக்கிய பங்காற்றியது. எல்லா பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.