Crime : சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து சோதனை செய்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதியன்று சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் வந்துள்ளது. கோவை விமான நிலையத்தில் 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெட்டியில் அரிய வகை பாம்பு, சிலந்தி, ஒணான், நண்டு உள்ளிட்டவை இருந்துள்ளன. இதையடுத்து அந்த பெட்டியை கொண்டு வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். இதில் டோம்னிக், ராமசாமி ஆகிய இருவர் சிக்கினர். மேலும் ஒருவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் உடன் சுங்கத்துறை அதிகாரிகள் ஆலோசணை செய்து வருகின்றனர். அரியவகை உயிரினங்களை கடத்தி வந்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அரிய வகை உயிரினங்கள் கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும், இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையம் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

