Crime: கோவை பல் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் ; காதலன் கைது
கோவையில் பல் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் காதலனை தற்கொலைக்கு தூண்டியதாக காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகள் சத்ய பிரியா என்பவர் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே சத்யபிரியா சம்பவத்தன்று காலையிலிருந்து சோகமான மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி வகுப்புக்கு சென்று விட்டு மதியம் உணவிற்காக விடுதிக்கு சென்ற சத்திய பிரியா, பின்னர் மதிய வகுப்பிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது அறையில் உள்ள மாணவிகள் சத்திய பிரியாவின் செல்போனுக்கு அழைத்துள்ளனர். பல முறை தொடர்பு கொண்டும் எந்தவித எதிர்வினையும் இல்லாததால் சந்தேகம் அடைந்த மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கதவு உட்புறமாக தாழிடப்பட்ட நிலையில் சத்யபிரியா மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் கதவை உடைத்து சத்ய பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்ற உறவுக்கார இளைஞரை சத்யபிரியா காதலித்து வந்ததும், அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மனமடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் இருந்து கோகுலை வரவழைத்த காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கிருஷ்ணகிரியில் படித்து வரும் கோகுல் தினமும் சத்யபிரியாவுடன் வாட்ஸப்பில் மணிக்கணக்கில் சாட் செய்தும், போனில் பேசியும் வந்துள்ளார். இதற்கிடையே இருவரும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தனது காதலை முறித்துக் கொள்வதாக சத்திய பிரியாவிடம் கோகுல் தெரிவித்ததால், மனமுடைந்த சத்யபிரியா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கோகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்