Crime: கோவையில் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி வடமாநில நபர்கள் தங்கி இருக்கக் கூடிய இடங்களை குறிவைத்து இளைஞர்கள் கும்பல் திருட முயற்சித்தது. இந்த திருட்டு முயற்சியில் இரண்டு செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி கேமரா சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை செல்போன் சிக்னல்களை வைத்து காவல் துறையிப்னர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் கருமத்தம்பட்டி அன்னூர் எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கோதி பாளையம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞர் அளித்த தகவலின் பேரில் பதும்பள்ளி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த எட்டு நபர்களை காவல் துறையினர் பிடிக்கச் சென்றனர்.
அப்போது காவல் துறையினர் வருவதை அறிந்து அங்கு இருந்த 8 பேரும் தப்ப முயற்சித்து உள்ளனர். உடனடியாக சமார்த்தியமாக செயல்பட்ட கருமத்தம்பட்டி காவல் துறையினர் துரத்திச் சென்று 8 பேரையும் பிடித்தனர். பின்னர் 8 பேரையும் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசரணை மேற்கொண்டதில், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன், விஜயராஜ், ரோகித், தாகிர் உசேன், திருமலை, கார்த்திக் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபடதும், தொடர்ந்து ஆயுதங்களை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் திருடிய 17 செல்போன் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய 3 கத்தி 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஒன்பது பேரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறுவர்கள் மூவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 6 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்