ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில் தங்க நகை திருட்டு..! பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்..!
விருகம்பாக்கத்தில் ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில் தங்க நகையை திருடி பிரியாணியுடன் இளைஞர் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் விருகம்பாக்கம் அமைந்துள்ளது சாலிகிராமம். இங்கு அருணாச்சலம் சாலை அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி. இவருக்கு வயது 34. இவர் அங்கே அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தான் பணிபுரியும் நகைக்கடையில் மேலாளராக சாரா என்பவரை விருந்துக்காக வீட்டுக்கு அழைத்துள்ளார்.
தாட்சாயிணியின் அழைப்பை ஏற்ற சாரா தனது நண்பர் சையத் அபுபக்கர் (வயது 27) என்ற நபரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தாட்சாயிணி வீட்டுக்குச் சென்ற சாராவிற்கும், சையது அபுபக்கருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டுள்ளது. விருந்து முடிந்து இருவரும் சாராவும், சையத் அபுபக்கரும் சென்றுவிட்டனர்.
அவர்கள் சென்ற பிறகு வீட்டைப் பார்த்த தாட்சாயிணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டு இருந்த 3 செயின்கள் மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தாட்சாயிணிக்கு சையத் அபுபக்கர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து விசாரித்தார். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, தாட்சாயிணி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிரியாணி விருந்துக்கு வந்தபோது தங்க, வைர நகைகளை திருடியதாகவும், அதை யாருக்கும் தெரியாமல் பிரியாணி சாப்பிடும்போது வாயில் வைத்து விழுங்கியதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். அப்போது, அவரது வயிற்றில் நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு இனிமா அளிக்கப்பட்டது. ஆனால், நகையை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில்,சையத் அபுபக்கர் இயற்கை உபாதை கழித்தபோதுதான் அவர் விழுங்கிய நகை வெளியே வந்தது. பின்னர், நகையை சுத்தம் செய்து அதை விருகம்பாக்கம் போலீசாரிடம் சையத் அபுபக்கர் ஒப்படைத்தார். போலீசார் அந்த நகைகளை தாட்சாயிணிடம் ஒப்படைத்தனர். நகைகள் கிடைத்ததே போதும் என்று எண்ணிய தாட்சாயிணி சையத் அபுபக்கர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
விருந்துக்கு அழைத்து வந்த இடத்தில் நகையை திருடி பிரியாணியுடன் விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்