சென்னை அருகே பெருஞ்சோகம்... பிரிந்த கணவன், மனைவி உயிர்.. டயரில் இருந்த ரத்தக்கறை
சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை சோனலூர் சந்திப்பில் முன்னே சென்ற பைக் மீது பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுனரை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக சென்ற பேருந்து
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் மாம்பாக்கம் அருகே சோனலூர் சந்திப்பில், முன்னே சென்ற பைக் மீது தனியார் பேருந்து அதி வேகமாக மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றது. பைக்கில் சென்ற கணவன் மனைவி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது உடல் நசுங்கி இறந்து கிடந்த இரண்டு உடல்களை மீட்டனர். பின்னர் தப்பி சென்ற பேருந்து புதுப்பாக்கம் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அதே சாலை எதிர்புறத்தில், புதுப்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் வழியாக ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த போது கேளம்பாக்கம் போலீசார் தனியார் நிறுவனத்தின் பேருந்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
டயரை சோதனை செய்த போலீஸ்..
அப்போது பேருந்து ஓட்டுநர் கோட்டீஸ்வரன் முன்னுக்குப் பின் முரணாக பேசி நழுவிய நிலையில் பேருந்து டயரை போலீசார் சோதனை செய்தபோது டயரில் ரத்த கரைகளைப் படிந்து இருந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரனை கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி என்பதும் மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர், நூத்தாஞ்சேரி, இரண்டாவது தெருவை சேர்ந்த தாமோதரன் மற்றும் அவரது மனைவி ஜெய் துர்கா என்பது தெரியவந்தது.
பின்னர் கணவன் மனைவி இருவர் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கணவன் மற்றும் மனைவி இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் விபத்துக்கள்
வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவன வாகனங்களால் அவ்வப்பொழுது விபத்து ஏற்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதை போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு திரும்ப வருபவர்கள் அதிகமாக செல்லும் சாலை என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.