(Source: ECI/ABP News/ABP Majha)
Thiruvanmiyur Robbery | தொடரும் ரயில்வே குற்ற சம்பவங்கள்... என்ன ஆனது சிசிடிவி பொருத்தும் உத்தரவு? முழு ஷாக் ரிப்போர்ட்!
நாடாளுமன்றக் கட்டிடத்துக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாதது ஏன்? மக்கள் நல அரசு, ரயில்வே துறையால் நட்டம் என்று சொல்லாமல், அதை சேவையாகவே கருத வேண்டும்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் காலை 6.40 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், 21 வயது மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், இந்தக் கொலை வழக்கில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்குமாரைக் கைது செய்தது போலீஸ். அவர் சிறைக்குள் மின்கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸ் தெரிவித்தது. எனினும் ராம்குமார்தான் உண்மையான குற்றவாளி என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பொது இடத்தில் பலரின் கண்முன் நடந்த ஸ்வாதி படுகொலைக்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்கும் படலத்தில், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அதிக மக்கள் நடமாடும் ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லையா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். நீதிமன்றமும் இதுகுறித்துச் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.
குறிப்பாக, ''நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், காவல் துறையை ஏன் பலப்படுத்தவில்லை?
24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம், நவீன கட்டுப்பாட்டு அறைகள் வழியாக முக்கியச் சாலைகள், பொது இடங்கள் மற்றும் காவல் நிலையங்களையும் கண்காணிக்கும் வசதியை ஏன் ஏற்படுத்தவில்லை?
ஒரே அமைப்பின் கீழ் செயல்படக்கூடிய ஒரு பெரிய கட்டுப்பாட்டு அறையை அமைக்காதது ஏன்?
விபத்துகளைத் தடுப்பதற்கு, கொலைகளைக் கண்டுபிடிப்பதற்கு உயர்தரமான, நவீன மயமான கேமராக்களை தமிழக அரசு ஏன் வாங்கி பொருத்தாமல் இருக்கிறது?
ஐடி, கார்ப்பரேட் நிறுவனங்களை அரசு ஏன் இத்திட்டத்தில் வரவேற்காமல் உள்ளது? அவர்களை அழைத்து ஊழியர்களுடைய பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்தும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதா?'' என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை உயர் நீதிமன்றம் எழுப்பியது.
அந்த சம்பவத்துக்கு பிறகு சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 43 ரயில் நிலையங்களில் 2016 டிசம்பர் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நுங்கம்பாக்கத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதேபோல எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் கேமராக்கள் பொருத்தப்பட்டன. எனினும் எல்லா ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
இதற்கிடையே சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் வழங்குபவரைக் கட்டிப்போட்டு, அங்கிருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாக நேற்று தகவல் வெளியானது. இன்று அந்த ரயில் நிலைய ஊழியரே நாடகமாடி இந்த திருட்டை நிகழ்த்தியிருக்கிறார் என்னும் தகவல் தெரியவந்துள்ளது. நீதிமன்றமே அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் என்று அறிவுறுத்தியும் அங்கு கேமரா பொருத்தப்படவில்லை. ஸ்வாதி கொலை நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசு உடனடியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி டெல்டா ரயில்வே ஊழியர்கள் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான ஜீவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''பயணிகளின் பாதுகாப்பை அரசு விளையாட்டாக நினைக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. ரயில்வே துறை லாபம் பார்க்க, தட்கல் டிக்கெட், நடைமேடைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணத்தை வசூலிப்பது போதவில்லையா? ரயில் நிலையங்களில் கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது எனில் பாலியல் வன்முறை கூட நடக்கலாமே?
உச்ச நீதிமன்றமே வேதனை
மக்கள் நலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு சமரசம் செய்துகொள்வது எந்த விதத்திலும் அழகல்ல. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூட, ’எங்களின் உத்தரவுகளை அரசு மதிப்பதில்லை’ என்று அண்மையில் வேதனை தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்ற உத்தரவையும் ரயில்வே மதிக்கவில்லை என்கிறார் ஜீவக்குமார்.
ஐஆர்சிடிசி நட்டத்தில் இயங்குவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, ''இதுகுறித்த வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். உண்மையிலேயே நட்டத்தில் இயங்கினாலும் இதுவொன்றும் வட்டிக்கு விடும் தனியார் நிறுவனம் அல்லவே.
கொரோனா காலத்தில் அரசுக்கு ஏராளமான பணம் வந்திருக்கிறது. வட்டிக்கு வட்டி... அபராத வட்டி போட்டு சம்பாதித்திருக்கிறது நம் அரசு. நாடாளுமன்றக் கட்டிடத்துக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாதது ஏன்? மக்கள் நல அரசு, ரயில்வே துறையால் நட்டம் என்று சொல்லாமல், அதை சேவையாகவே கருத வேண்டும்'' என்று ஜீவக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் நிர்பயா நிதியின் கீழ் எழும்பூர் ரயில் நிலையத்தில் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்ட்ரல்- 110, நுங்கம்பாக்கம் -16, பரங்கிமலை (செயிண்ட் தாமஸ் மவுண்ட்)- 28, பழவந்தங்கால் - 24, பேசின் பிரிட்ஜ் - 28, சென்னை பீச்- 16, மயிலாப்பூர் - 40, மாம்பலம் - 8, தாம்பரம் - 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவான்மியூர் உள்ளிட்ட 74 ரயில் நிலையங்களில், சிசிடிவி கேமராக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தென்னிந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் குகனேசன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் சிசிடிவி கேமரா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், AI, A, B & C வகை ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.295 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.95 கோடி உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி ஒப்பந்தத்தின்படி பயன்படுத்தப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
நிரந்தரத் தீர்வாக இருக்காது
எனினும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தற்காலிகத் தீர்வாகவே இருக்கும். பெண்கள் பாதுகாப்பை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்கிறார் மாதர் சங்க தெற்கு மாநகர நிர்வாகி பரிமளா. இதுகுறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''ஸ்வாதி கொலை விவகாரத்திலேயே உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவில்லை. இதற்கு சிசிடிவி கேமரா இல்லாததும் ஒரு காரணம்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தினால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிசிடிவி கேமரா வைத்தபிறகு, பொது இடங்களில் நின்றுகொண்டு பெண்களைக் கிண்டல் செய்வது குறைந்திருக்கிறது. பயம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் குற்றத்தை ஆய்வு செய்யவும், ஆதாரங்களைத் திரட்டவும் உதவுகிறது.
அதேநேரத்தில் சிசிடிவி கேமராக்கள் நிரந்தரத் தீர்வாக இருக்காது. குற்றம் இழைப்பவர்களுக்கு சிறிய தடையாக மட்டுமே இருக்கும். நடைமுறையில் குற்றத்திற்கான ஆணிவேர் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு முழுமையாக, நிரந்தரமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்'' என்று பரிமளா தெரிவித்தார்.
மூன்றாவது கண்ணாக, குற்றங்களின் சாட்சியாக நிற்கும் சிசிடிவி கேமராக்களை அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், குற்றங்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் புறம்தள்ளி விட முடியாது.