Crime :சம்பள பாக்கி... செல்போன் திருட்டு..! கூண்டோடு சிக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி: 9 பேர் கைது!
சென்னை அருகே இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 23 வயதான பாலாஜி. இவர் அதே தெருவில் ஐஸ் கடை நடத்தி வரும் 29 வயதான அன்சர் (எ) அணிஷ்(29), கடையில் வேலை பார்த்து வந்தார். அன்சர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளராக இருந்து வருகிறார்.
பாலாஜிக்கு அணிஷ் கடந்த சில மாதங்களாக சம்பள பாக்கி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடையில் வேலை செய்யும் நபர்களின் செல்போன் மற்றும் 10,500 ரூபாய் ஆகியவற்றை பாலாஜி திருடியதாக அணிஷ் நினைத்துள்ளார்.
இதையடுத்து, அணிஷின் நண்பர்களான பாலகுமார்(20), சரத் (29), ராஜேஷ் (29), நிசார் அகமது (24), அபில் ரகுமான் (22), முகேஷ் கண்ணா (19), மாதவன்(19), மனோஜ் குமார் (24) உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து பாலாஜியை கட்டையால் சரமாறியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து, விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேரையும் கைது செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் :
2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேபோல், நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று அசத்தினர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதுபோன்ற குற்ற வழக்குகளில் சிக்குவது விஜய் மக்கள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்