![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Online Rummy Games | மாத சம்பளம் ஒரு லட்சம்.! ரயில்வே ஊழியரை திருடனாக்கிய ஆன்லைன் சூதாட்ட போதை - திடுக்கிடும் பின்னணி!
மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெறும் ஊழியரான டீக்காராமை ஆன்லைன் சூதாட்டமே கொள்ளையில் ஈடுபட வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
![Online Rummy Games | மாத சம்பளம் ஒரு லட்சம்.! ரயில்வே ஊழியரை திருடனாக்கிய ஆன்லைன் சூதாட்ட போதை - திடுக்கிடும் பின்னணி! chennai Railway employee turned robber by online gambling thiruvanmiyur counter robbery tikkaram Online Rummy Games | மாத சம்பளம் ஒரு லட்சம்.! ரயில்வே ஊழியரை திருடனாக்கிய ஆன்லைன் சூதாட்ட போதை - திடுக்கிடும் பின்னணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/b9c942dc3f10f79ac196cdbeab64c51e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே நேற்று பரபரப்பாக்கிய சம்பவம் திருவான்மியூர் ரயில்நிலைய கொள்ளை. ரயில் நிலையத்துக்குள், அதுவும் டிக்கெட் கவுண்டருக்குள் சென்ற மர்ம நபர்கள் உள்ளே இருந்த ரயில்வே ஊழியரான டீக்காராம் என்பவரிடம் ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. தன்னை கட்டிப்போட்ட மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி பணத்தை எடுத்துச் சென்றதாக கூறினார் டீக்காராம்.
மக்கள் நடமாட்டமுள்ள ஒரு பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையா என்பது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை டீக்காராமிடமே தொடங்கினர். மர்ம நபர்கள் எப்படி வந்தார்கள்? எத்தனை பேர் வந்தார்கள்? எப்படியே சென்றார்கள் என முதற்கட்ட தகவல்களை கேட்டு தெரிந்துகொண்ட போலீசார் அதற்கேற்ப விசாரணையை தீவிரப்படுத்தினர். எந்த குற்ற நடவடிக்கை என்றாலும் போலீசார் முதலில் தேடி செல்வது சிசிடிவியைத் தான். ஆனால் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லை என்பது போலீசாருக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் ரயில் நிலையம் அருகேயுள்ள சிசிடிவியை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
ரயில் நிலையத்துக்குள் யாரெல்லாம் செல்கிறார்கள்? உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறியவர்கள் யார் என்றெல்லாம் போலீசார் சல்லடை போட்டனர். அதில் ஒரு பெண்மணி சிக்கினார். விசாரணையில் அந்த பெண்மணி ரயில்வே ஊழியரான டீக்காராமின் மனைவி என்பது தெரியவந்தது. இதன் மூலம் கொள்ளை விவகாரத்தில் போலீசாருக்கு வெளிச்சம் பிறந்தது. நிச்சயம் இது கொள்ளை நாடகம்தான் என உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார் ரயில்வே ஊழியர் டீக்காராமை கேள்விகளால் துளைத்தனர்.
விசாரணையில் திக்குமுக்காடிய அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய மனைவியை வரவழைத்து டிக்கெட் கவுண்டரில் உள்ள பணத்தை டீக்காராமே எடுத்துக் கொடுத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் டீக்காராம் மற்றும் அவரது மனைவியை தவிர வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மாத சம்பளம் ஒரு லட்சம்:
ரயில் நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி ரூ.1.32 லட்சம் கொள்ளை என்பது தொடக்கத்திலேயே போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வெறும் ஒரு லட்சத்துக்கு இவ்வளவு பெரிய ரிஸ்கா என மற்றொரு கோணத்திலும் போலீசார் பார்வையை திருப்பினர். அதில்தான் டீக்காராம் தற்போது சிக்கியுள்ளார். ஆனாலும் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் ரயில்வே ஊழியர்கள் தன் மனைவியுடன் சேர்ந்து இப்படியான கொள்ளையில் ஏன் ஈடுபட்டார் என்பது மற்றொரு பெரிய கேள்வியாக போலீசாருக்கு இருந்தது. அதற்கான விசாரணையில் இந்த கொள்ளையின் தொடக்கம் ஆன்லைன் விளையாட்டாக இருந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு போதை:
மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெறும் ஊழியரான டீக்காராமை ஆன்லைன் சூதாட்டமே கொள்ளையில் ஈடுபட வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டீக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கடனை அடைக்கவே கொள்ளை சம்பவத்தை நடத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட கடனால் வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்ட தானும் தற்கொலை செய்துகொண்டார். அடுத்த நாளே ஆன்லைன் சூதால் ரயில்வே ஊழியர் கொள்ளைக்காரராக மாறிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. தொடர் உயிர் பலிகளையும், குற்றச்சம்பவங்களையும் அரங்கேற்றும் ஒரு கொடூர அரக்கனாக ஆன்லைன் சூது தொடர்ந்து வருவது பல்வேறு தரப்பினரையும் அச்சம் கொள்ளச்செய்கிறது. உடனடியாக இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென்பதும் பலரின் கோரிக்கையாகவும் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)