Crime: சிறுமியை வன்கொடுமை செய்த கணவர்.. உடந்தையாக மனைவி.. இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு!
ஆவடி அருகே 4-வது சிறுமியை வன்கொடுமை செய்த கணவன் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அடுத்த அன்னனூர் அந்தோணி நகரில் 63 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டின் அருகில் ஒரு தம்பதி, தனது 4 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜுன் 27-ஆம் தேதி அந்த நடுத்தர வயது தம்பதி தனது மகனை டியூஷனில் விட்டுவிட்டு தங்களது அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். 4 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், 4 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறி பயத்தில் சத்தமிட்டதால், அவர் சிறுமியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுயநினைவிழந்த சிறுமியை சணல் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், சிறுமி சடலத்தை கோணிப் பையில் அடைத்து, பாத்ரூமில் உள்ள ஒரு பக்கெட்டில் போட்டு வைத்துள்ளார். இதற்கு மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார்.
அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்த 4 வயது சிறுமியின் தாய், தனது மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்து, பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரிடம் விசாரித்தபோது, நான் பார்க்கவில்லையே என்று கூறி சிறுமியை தேடுவது போல் நாடகமாடியுள்ளார். சிறுமியின் பெற்றோரை திசைதிருப்பி வேறு இடத்தில் தேடிப்பார்க்க அனுப்பி விட்டு, தன் வீட்டு பாத்ரூமில் இருந்த இறந்த சிறுமி உடலை அவர்கள் வீட்டு பாத்ரூமில் போட்டுவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தனது வீட்டு பாத்ரூமில் மகள் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிர விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார். இதில் முதல் குற்றவாளியான மீனாட்சி சுந்தரத்திற்கு 4 பிரிவுகளின் கீழ் வழங்கிய தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 2 மாதம் சிறைத்தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதேபோல், சிறுமியின் கொலை மற்றும் கணவன் வன்கொடுமை செய்ததற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ராஜம்மாளுக்கு இரட்டை ஆயுள் தண்ட னையும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக 10 வருடம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
கணவன் மனைவி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி சுபத்ராதேவி இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சுபத்ரா தேவி உத்தரவிட்டார். தீர்ப்புக்குப்பின் குற்றம் சாட்டப்பட்ட தம்பதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.