Chennai: தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி.! சென்னையில் தற்கொலை செய்த பிளஸ் 1 மாணவி
தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு அச்சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில், பிளஸ் 1 படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு அச்சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பி.இ.கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தாட்சாயினி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு பவதாரணி (16) பவன் கல்யாண் (16) என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று மார்ச் 31 ஆம் தேதி கமல்ராஜ் வழக்கம் போல் டெய்லர் கடைக்குச் சென்றார். பின்னர் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். மாலை வீடு திரும்பியதும் டியூஷன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று பவதாரணி உடல்நிலை சரியில்லை எனக் கூறி டியூஷனுக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பவன் கல்யாண் மட்டும் டியூஷனுக்குச் சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பவதாரணி கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். வழக்கம்போல் வேலை முடித்துத் திரும்பிய தந்தை கமல்ராஜ், படுக்கையறையில் மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து உறைந்து போயுள்ளார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பவதாரணியை கீழே இறக்கி பரிசோதித்த போது அவர் உடலில் உயிரில்லை. பின்னர் அயனாவரம் போலீஸார் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மாணவி தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில்,ஆங்கிலத்தில் I am going to death. It is all over finish என்று எழுதிவைத்திருந்தார். அதன் கீழே கண்ணீர் அஞ்சலி பவதாரணி என்று தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மறைந்த சோகமா இல்லை வேறேனும் காரணமா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.