சென்னை விமான நிலையம் : கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்..! மதிப்பு 262 கோடியாம்
கணக்கில் வராத வெளிநாட்டு பணங்கள் கடத்துவது பெருமளவு அதிகரிப்பு.ஒரே ஆண்டில் ரூ.262.05 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,234 வழக்குகளில் 144 போ் கைது செய்யப்பட்டனா்
![சென்னை விமான நிலையம் : கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்..! மதிப்பு 262 கோடியாம் chennai airport Smuggling of unaccounted foreign currency is on the rise. In a single year, Rs 262.05 crore worth of smuggled goods were seized at the Chennai airport and 144 people were arrested in 234 cases சென்னை விமான நிலையம் : கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்..! மதிப்பு 262 கோடியாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/2bba8326bcde0e73dff4bab116933b44_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை சர்வதேச விமான நிலையம் கடத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மற்றும் ரூ.262.05 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தங்கம் கடத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.70.12 கோடி மதிப்புடைய 157.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,144 பேர் கைது செய்யப்பட்டனர். அவா்களில் 20% பெண் கடத்தல் காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெராயின்
அதைப்போல் போதை கடத்தல் சென்னை விமான நிலையத்தில் அதிக அளவில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ரூ.181.51 கோடி மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அதிகபட்சமாக ரூ.170 கோடி மதிப்புடைய 25.44 கிலோ ஹெராயின் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் போதை கடத்தல் வழக்குகள் 41 பதிவாகி உள்ளன. அதில் 12 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களில் பெரும்பான்மையோர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். மற்ற வழக்குகளில் கடத்தல் ஆசாமிகள் இல்லாமல் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டவைகள். எனவே அவைகளில் வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர், அந்த குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஹவாலா பணம்
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு பணம், கணக்கில்லாத ஹவாலா பணம் கடத்தலும் அதிகமாக நடக்கின்றன. கடந்த 2001-ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணம் பறிமுதல் வழக்குகள் 43 பதிவாகி உள்ளன. அதில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.10.42 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைகள் தவிர மின்னணு சாதன பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்கள், நட்சத்திர ஆமைகள், அரியவகை விலங்குகள்,பழங்கால சிலைகள், கடல்வாழ் உயிரினங்கள் போனறவைகள் கடத்தலும் அடிக்கடி நடக்கின்றன.
அதைப்போல் நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டிலும், கடந்த 5 மாதங்களில் அதிக அளவிலான கடத்தல்கள் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகின்றன. குறிப்பாக தங்கம், போதை பொருள், கரன்சி, வைரக்கற்கள், அரியவகை உயிரினங்கள் கடத்தல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதில் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது. இந்த கடத்தலில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.மேலும் ஆட்கள் இல்லாமல் போலியான முகவரிகளுடன் பாா்சல்கள் வழியிலாகவும் போதைப்பொருட்கள் கடத்தல்கள் நடக்கின்றன.
தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல் சமீபகாலமாக மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் குறைந்து,சர்வதேச விமானங்களுக்கு விடுக்கப்பட்ட, தடைகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்பு, கடத்தல் ஆசாமிகள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, கடந்த 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட தங்கள் தொழிலை மீட்டெடுக்கும் விதத்தில் கடத்தல் தொழில் அமோகமாக நடைபெறுகிறது.
மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து தங்கம் கடத்தல் மிகவும் நவீன முறையில் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் நடக்கிறது. தங்கத்தை பிஸ்கெட் அல்லது கட்டிகளாக எடுத்துவந்தால், விமான நிலையங்களில் நடக்கும் சோதனையில் பெருமளவு அவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இதை தடுப்பதற்காக தங்கத்தை பசையாக மாற்றி எடுத்து வருகின்றனர். அதற்காக அவர்கள் சில ரசாயன கெமிக்கல்களை பயன்படுத்துகின்றனர்.Orange-tinged nitric acid and hydrochloric acid என்ற ரசாயணத்தை தங்கம் கடத்தும் ஆசாமிகள் பெருமளவு பயன்படுத்துகின்றனா். இது சுங்கத்துறையினருக்கு சவால் விடுவதைபோல் உள்ளது.
ரசாயண கலவை
இந்த ரசாயண கேமிக்கல்களை பயன்படுத்தி,தங்கக்கட்டிகளை உருக்கி கெட்டியான திரவநிலைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.பின்பு பசைபோன்ற தங்கத்தை சிறுசிறு பிளாஸ்டிக் கவா்களில்,பவுச்சுகளில் அடைக்கின்றனா். அவைகளை உள்ளாடைகள், உடலின் ஆசனவாய்பகுதி, கூந்தல்கள், காலனிகள், சூட்கேஸ், கைப்பைகளின் ரகசிய அறைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைத்து எடுத்து வருகின்றனா். சுங்க அதிகாரிகள் சோதனை கருவிகளில், தங்கப்பசை தெரிவது இல்லை. அதன்பின்பு கடத்தல்காரா்கள் தங்கப்பசையுடன் வெளியேறி,கடத்தல் கும்பலின் தலைமையிடம் ஒப்படைக்கின்றனா்.அவா்கள் மீண்டும் ரசாயண கலவையை பயன்படுத்தி,தங்கப்பசையை கட்டிகளாக மாற்றுகின்றனா். பின்பு கடத்தல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் விமானநிலையத்தில் சுங்கத்துறையின் ஏா் இன்டிலிஜெண்ட் மூலம், ஒரு சில கடத்தல்காரா்களை கண்டுப்பிடித்து, தங்கப்பசையை பறிமுதல் செய்கின்றனா்.ஆனால் அதிக அளவு தங்கப்பசை சுங்கத்துறையிடம் சிக்காமல் வெளியேறிக்கொண்டிருப்பதாகவும்,இது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் முன்னாள் சுங்கத்துறை அதிகாரி ஒருவா் கூறினாா். இதைதடுக்க ரசாயண கலவையை பயன்படுத்தி,தங்கப்சையை மாற்றுவதை தடுக்க மத்திய நிதித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதைபொருள் கடத்தல் ஆசாமிகளுக்கு கடுமையான சிறைதண்டனை விதிப்பதுபோல், இந்த தங்கப்பசை கடத்தல் கும்பலுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும் என்று சுங்கத்துறை முன்னாள் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)