சென்னை விமான நிலையத்தை அலறவிட்ட பயணி... பச்சை நிறத்தில் அட்டைப்பெட்டியில் இருந்த உயிர்
பச்சோந்திகளை சட்டவிரோதமாக மறைத்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.
பயணி மீது சந்தேகம்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று ஞாயிறு அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில், சந்தேகப்பட்ட பயணிகளை, சுங்க அதிகாரிகள் நிறுத்தி பரிசோதித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், இரண்டு பெரிய அட்டைப்பட்டிகளுடன், இந்த விமானத்தில் வந்து, கன்வேயர் பெல்டில் வந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.
ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள்
ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்த ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி அந்த இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மற்றும் சாக்லேட், பிஸ்கட்கள் இருக்கின்றன என்று கூறினார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில், அந்த இரண்டு அட்டைப்பட்டிகளையும் திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அந்த அட்டை பெட்டிக்குள், நேரத்துக்கு தகுந்தார் போல் நிறங்களை மாற்றிக் கொள்ளும்,(Baby Lguana) என்ற ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள், பச்சை,நீலம், மஞ்சள், மற்றும் ஆரஞ்சு கலர்களில் உயிருடன் இருந்தன.
இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின காப்பகம் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன உயிரின காப்பக குற்றப்பிரிவு அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அந்த ஆப்பிரிக்க வகை பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பயணி இடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பச்சோந்திகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்திக் கொண்டு வரப்பட்டது என்று தெரிந்தது.
மேலும் இந்த பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இங்கு பரவி, விலங்குகள், பறவைகள், மற்றும் மனித உயிரினம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவித்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இந்த பச்சோந்திகளை, எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில், வந்த நாட்டுக்கே திருப்ப முடிவு செய்தனர். அதோடு முறையான ஆவணங்கள் இன்றி கடத்திக் கொண்டு வந்த, பயணியை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கைகள் எடுத்தனர்.
402 பச்சோந்திகள்
இதற்கிடையே பயணி வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகளிலும், 402 பச்சோந்திகள் இருந்தன. அவைகளில் 67 பச்சோந்திகள், அட்டைப்பட்டிக்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்து விட்டன. இதை அடுத்து அதிகாரிகள் உயிரிழந்த, பச்சோந்திகளை அகற்றிவிட்டு, மற்ற 335 பச்ச பச்சோந்திகளை, அதே அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைத்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், இன்று அதிகாலை பாங்காக்கிற்கு திருப்பி அனுப்பினர்.