Crime : காது குத்து விழாவுக்கு அழைத்து கொலை.. உறவினரை அடித்துக்கொன்ற நபர்.. மூவர் கைது
" செங்கல்பட்டு மாமல்லபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினர்களே இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் என்கின்ற சின்ன தம்பி (24). இவரின் உறவினர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கொல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (33) . ஊர் ஊராக சென்று குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலையோரம் கடந்த சில மாதங்களாக கொட்டகை போட்டு தங்கி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது சகோதரர் விக்னேஷ் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
மது அருந்தும் வழக்கம்..
சில மாதங்களாக பட்டிப்புலம் பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் சின்னதம்பி பாண்டியன் ஆகியோருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அவ்வப்பொழுது சின்னத்தம்பி பாண்டியர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் மகனுக்கு காதுகுத்து விழா குலதெய்வ கோவிலில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்களை, நேற்று இரவே தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார்.
இதையடுத்து உறவினரான செங்கல்பட்டு, கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த சின்னதம்பி மற்றும் பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வந்தனர். பின்னர் அவர்களுக்கு ராமச்சந்திரன் மது விருந்து வைத்துள்ளார். அனைவரும் மது போதையில் இருந்தபோது மொய் செய்வது தொடர்பாக சின்னத்தம்பிக்கும், மற்றவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சின்னதம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
தப்பி ஓடி தலை மறைவு
இதில் படுகாயம் அடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாண்டியன், விக்னேஷ் ஆகியோர் மீது கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரித்தபொழுது : ஏற்கனவே ராமச்சந்திரன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவருக்கும் ஒன்றாக மது அருந்தியபொழுது முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக மது அருந்தியபொழுது குழந்தைகளை ஏன் பிச்சை எடுக்க வைக்கிறாய் என ராமச்சந்திரன் என்னிடம் சின்னத்தம்பி கேட்டுள்ளார். என் குடும்ப விவகாரத்தில் தலையிட நீ யார் என கேட்டு சின்னத்தம்பி உடன் ராமச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பாண்டியனும் பேசியுள்ளார். அப்பொழுது அவர்களை சின்னத்தம்பி தாக்கியுள்ளார். இந்த நிலையில் தான் தனது குழந்தைகளுக்கு திருப்போரூர் கோவிலில் காது குத்துவதற்காக அனைவரையும் ராமச்சந்திரன் அழைத்துள்ளார். அப்பொழுது மீண்டும் , மொய் செய்வது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சின்ன தம்பியின் மனைவி கஸ்தூரி மாமல்லபுரம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன