Crime: உணவகத்தில் மேற்கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே குதித்து கல்லாவில் கை வைத்த பெண்கள்: சிசிடிவி வீடியோ
ஆரணியில் அசைவ உணவகத்தில் 2 பெண்கள் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்று திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவை வைத்து பெண் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
![Crime: உணவகத்தில் மேற்கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே குதித்து கல்லாவில் கை வைத்த பெண்கள்: சிசிடிவி வீடியோ CCTV footage of 2 women breaking the roof of a non vegetarian restaurant and stealing it is sensational Crime: உணவகத்தில் மேற்கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே குதித்து கல்லாவில் கை வைத்த பெண்கள்: சிசிடிவி வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/68dbf5f2ef575d67ac622b47219d291d1673534374437187_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமம் ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாந்தம் என்கின்ற அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அசைவ உணவகம் அப்பகுதியில் அதிக அளவிலான வாடிக்கையாளரை கொண்டது. அந்த தனியார் அசைவ உணவகத்திற்கு தினந்தோறும் அசைவ உணவு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அசைவ உணவகம் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணியளவில் மூடப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவினை பூட்டிக் கொண்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் நள்ளிரவு 1 மணி அளவில் இரண்டு பெண்கள் அடையாளம் தெரியாதது போல் சுடிதார் மீது கோட் மற்றும் முகமூடி அணிந்து கூரையை பிரித்துக் கொண்டு உணவகத்திற்கு உள்ளே இறங்கி பணப்பெட்டியை திறந்து அதில் உள்ள சுமார் 4,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து அசைவ உணவக உரிமையாளர் வழக்கம்போல் காலையில் உணவகத்தை திறந்துள்ளார். அதன் பிறகு கல்லா பெட்டியின் அருகே சென்று பார்த்த போது பணப்பெட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அசைவ உணவக உரிமையாளர் ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவல் அறிந்த கிராமிய காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி அதில் இருந்த வீடியோவை சோதனை செய்தனர்.
அப்போது அன்று நள்ளிரவில் இரண்டு 2 பெண்கள் முகமூடி அணிந்து கொண்டு உணவகத்தின் மேற்கூறையை பிரித்துக்கொண்டு உணவகத்தில் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடும் காட்சி அந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. ஆரணி கிராமிய காவல்துறையினர் உணவகத்தின் சிசிடிவி பதிவை வைத்து 2 பெண் குற்றவாளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த முகமூடி பெண் திருடர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி பகுதியில் நள்ளிரவில் 2 பெண்கள் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கி உணவகத்தில் திருடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் மர்ம நபர்களால் கோவில் உண்டியலை உடைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகியது இத்தகைய சிசிடிவி பதிவுகளை வைத்தும் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறுவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)