Siva Shankar Baba | இன்று மீண்டும் புழல் சிறை : சிவசங்கர் பாபாவும், 3 நாள் விசாரணையும்..!
சிவசங்கர் பாபாவை 8 நாட்கள் நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐசி அனுமதி கோரினர். ஆனால் 3 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு தீடீர் என்று உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 8 நாட்கள் நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் 3 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி ஜூன் 28,29, மற்றும் 30 ஆகிய தினங்கள் சிவசங்கர் பாபாவின் விசாரணை நாள்களாக குறிப்பிடப்பட்டது. முதல்நாளான ஜூன் 28-இல் எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் விசாரணையில் அழுது புலம்பிய சிவசங்கர் பாபா தன் மீது குற்றமில்லை என கூறியுள்ளார். அந்த விசாரணையில் அவர் பள்ளியில் உள்ள சொகுசு அறை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவிகள் 5 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் , சிவசங்கர் பாபா தனது LOUNGE என்ற சொகுசு அறையில் வைத்து தான் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நேற்றைய விசாரணை சுஷில் ஹரி பள்ளியிலேயே நடத்தப்பட்டது. இதற்காக சிவசங்கர் பாபா பள்ளிக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு பாபாவிடம் துருவித்துருவி கேள்வி கேட்கப்பட்டது. ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது, மாணவிகளுடன் நெருக்கமான புகைப்படங்களை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவிகளுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? ஆசிரியர்கள் வேறு யாராவது உதவி செய்தார்களா? உள்ளிட்ட பல கேள்விகள் சிவசங்கர் பாபாவிடம் கேட்கப்பட்டது.மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய கணினி, லேப்டாப், மொபைல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றது. மேலும் கணினியை பயன்படுத்த தூண்டுதலாக இருந்த கணினி ஆசிரியர்கள் இருவரை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே சுஷிக் ஹரி பள்ளிக்கு, சிவசங்கர் பாபா வருவார் பாபா வருவார் என்று எதிர்பார்த்து, காலை முதல் காத்திருந்த அதே பகுதியில் வசிக்கும் பாபா ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் விசாரணை முடித்து செல்லும் போது " பாபா பாபா" என்று கூச்சலிட்டு பாப்பாக்கள் போல கதறி அழுதனர். ‛சரி போப்பா.. போப்பா...’ என்பதை போல அவர்களை பார்த்து அங்கிருந்து போலீசாருடன் சென்றார் பாபா. சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதுதது மட்டுமின்றி, ‛அவர் நல்ல மனுஷன் பா... பாபா நல்ல மனுஷன் பா ஒழுக்கம் என்றால் என்னான்னு சொல்லி கொடுப்பாருப்பா...’ என கண்ணீருடன் போலீசாரிடம் அழுது அழுது சான்றிதழ் அளித்தனர்.
இந்நிலையில் இன்றுடன் மூன்றாவது நாள் விசாரணை முடிவடைய உள்ள நிலையில் இன்று (புதன்) மாலைக்குள் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விசாரணையில் கைப்பற்ற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும். பின்னர் இன்று மாலை சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
‛குடும்பத்தோடு வாங்க... லீவு எடுத்துட்டு போங்க,’ தி.மலை போலீசாருக்கு ‛ஹேப்பி பெர்த்டே’ கிப்ட்!