வளர்ப்பு நாயை தூக்கி அடித்துக் கொன்ற கொடூர பெண்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி - காரணம் என்ன?
செல்லப்பிராணிகளை பராமரிக்க பணியமர்த்தப்பட்ட பெண், பெங்களூரில் உள்ள அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கும் வசதியுடன் சேர்த்து ரூ.23,000 மாத சம்பளமாக பெற்றார்.

பெங்களுருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வளர்ப்பு நாயை தூக்கி அடித்துக் கொன்ற பெண் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
வளர்ப்பு அடித்துக் கொலை
பெங்களூருவில் வளர்ப்பு நாயை பெண் ஒருவர் அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ரஷிகா எம்பிஏ படித்து வருகிறார். இவர், தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதனை பராமரிப்பதற்காக புஷ்பலதா என்ற பெண்ணை பணியமர்த்தினார். இவர், அந்த நாய்களை வெளியில் அழைத்துச் செல்வது, அதற்கு உணவு கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதற்காக, ரஷிகா தான் குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கும் வசதியுடன் சேர்த்து 23000 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.
பொய் சொன்ன புஷ்பலதா
இந்த நிலையில், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி புஷ்பலதா வழக்கம்போல, இரண்டு செல்லப் பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பியதும், சாலை விபத்தில் ஒரு நாய் இறந்துவிட்டதாக ரஷிகாவிடம் கூறியுள்ளார். இதனை அதிர்ச்சி அடைந்த அவர், புஷ்பலதா கூறுவதை நம்பாமல் இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ரஷிகா குடியிருப்பின் நிர்வாகத்தின் உதவியுடன் சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தார். அதில், லிப்டிற்குள் புஷ்பலதா ஒரு நாயை ஈவு இரக்கமில்லாமல் தூக்கி அடித்து கொன்றுள்ளார். பின்னர், ஒரு நாயை கூட்டிக்கொண்டும், இறந்த நாயை இழுத்தும் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷிகா அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் மீது பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை புஷ்பலதாவை கைது செய்து போலீசார் விசாரித்ததில், செல்லப்பிராணி தொடர்ந்து குரைத்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர் அதை கொன்றதாகவும் கூறினார். இருப்பினும், விசாரணையில் அவர் சமீபத்தில் ரஷிகாவின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடியதாகவும் அதற்காக அவரை கண்டித்ததாக தெரியவந்தது. இதற்காக பழிவாங்க நாயை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதனால், இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர், பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர்.





















