Himachal Pradesh: பேண்ட்டில் தேளை விட்ட கொடூரம்.. மாணவனை டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்!
எட்டு வயது பட்டியலின சிறுவன் மீது பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சாதி ரீதியான துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பட்டியலின மாணவன் ஒருவனுக்கு சாதி ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட கொடூரம் இந்த நிகழ்வுகள் அந்த சிறுவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
ஒரு வருடமாக கொடூர தாக்குதல்
இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள ஒரு பள்ளியில் எட்டு வயது பட்டியலின சிறுவன் ஒருவன் 3ம் வகுப்பு படித்து வருகின்றான். இதனிடையே தன்னுடைய மகன் மீது பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சாதி ரீதியான துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலை தொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில், “ எனது மகன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரான தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம் மற்றும் கிருத்திகா தாக்கூர் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது. மருத்துவமனையில் சோதனை செய்தபோது காதுகுழாயில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
பேண்டில் தேளை விட்ட கொடூரம்
அதுமட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் தேவந்திரா எனது மகனை பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்று அவனது பேண்ட்டுக்குள் தேளை வைத்து மிரட்டி கொடுமைப்படுத்தியுள்ளார்.அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுகிறார்கள். நேபாளி மற்றும் பட்டியலின மாணவர்கள் உணவருந்தும் போது மேல் சாதி என குறிப்பிடப்படும் மாணவர்களிடமிருந்து விலகி தனியே உட்கார்ந்து சாப்பிட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து நியாயம் கேட்க சென்றபோது தலைமை ஆசிரியர் எனது மகனையும், குடும்பத்தினரையும் மிரட்டினார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கவோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். கடந்த அக்டோபர் 30ம் தேதி எனது மகனை பள்ளியில் இருந்து வெளியேற்றியதோடு, என்னை குடும்பத்தோடு எரித்து விடுவோம் எனவும் மிரட்டினார்.
போலீசார் வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார்ணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்களை நல்வழி படுத்த வேண்டிய ஆசிரியர்களே இப்படி ஒரு செயலில் ஈடுபடுவது பெரும் அவமானத்திற்குரியது என தெரிவித்து வருகின்றனர்.





















