Crime: ”வாங்க தம்பி கல்யாணத்தை பத்தி பேசலாம்” வீட்டிற்கு வந்த மகளின் காதலன், அடுத்த நடந்த கொடூரம்
Mumbai Crime: திருமணம் குறித்து பேசலாம் என அழைத்து மகளின் காதலனை தந்தை அடங்கிய கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

Mumbai Crime: மும்பையில் மகளின் காதலனை அடித்துக் கொன்ற வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்:
தனது மகளை காதலித்த நபரை, திருமணம் குறித்து பேசலாம் என வீட்டிற்கு அழைத்த பெண்ணின் தந்தை, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே அருகில் உள்ள பிம்ப்ரி சின்ச்வத்த்தில் உள்ள சங்வி பகுதியில் கடந்த ஜுலை மாதம் 22ம் தேதி இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
9 பேர் கைது
ரமேஷ்வர் கெங்கட் என்ற அந்த இளைஞரின் கொலை வழக்கில் பெண்ணின் தந்தை பிரசாந்த் சர்ஷர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மீதும் வழகுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு ஏன்?
ரமேஷ்வர் தனது உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு குற்றப்பிண்ணனி இருப்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கற்பழிப்பு வழக்குடன் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக போக்சோ பிரிவிலும் ரமேஷ்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தாலும், அந்த பெண்ணும் ரமேஷ்வரும் திருமணம் செய்துகொள்வதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர்.
திருமண பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இந்நிலையில் தான், திருமணம் குறித்து பேசி முடிவு செய்யலாம், வீட்டிற்கு வாருங்கள் என ரமேஷ்வருக்கு பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோருடன் அந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பெண்ணின் குடும்பத்தினர், ரமேஷ்வரை குண்டுக்கட்டாக தூக்கி ஒரு அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். சுமார் 11 பேர் கொண்ட அந்த கும்பல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ரமேஷ்வர் படுகாயமடைந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை ம்ற்றும் தொடர் கண்காணிப்பு என அவரை காப்பாற்ற எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற, ரமேஷ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி என பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என, ரமேஷ்வரின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.





















