Video | ஆரணியில் அதிர்ச்சி.. காளை விடும் விழாவில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு..
ஆரணி அருகே காளை விடும் விழா நடத்தி 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததால் காளை விடும் விழா நடத்திய முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வருடாவருடம் மார்கழி அமாவாசை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காளை விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து 125 கிராமங்களுக்கு காளை விடும் விழா நடத்த அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையும் மீறி இன்று ஆரணி அருகே கொளத்தூர் கிராமத்தில் 55-ஆம் ஆண்டு காளை விடும் விழா காலையில் இருந்து தடையை மீறி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அனுமதிக்கப்படாத நிலையிலும் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்துக் கொண்டு காளை விடும்விழா தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியில்லாமல் காளை விடும் விழாநடைப்பெற்றது இதில்பைக்கில் சென்ற பெண்ணை காளை தூக்கி வீசியது மற்றும்50க்கும் மேற்பட்டோர் படுகாயகம் காளை விடும்விழா நடத்திய முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு @imanojprabakar @SRajaJourno @abpnadu pic.twitter.com/BoZuTg36He
— Vinoth (@Vinoth05503970) January 2, 2022
இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த காளைவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் அப்பகுதியை இரண்டு சக்கர வாகனத்தில் கடந்து சென்ற இருவரில் வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்துசென்ற பெண்மணியை காளை தூக்கி வீசியது இதில் அந்த பெண்மணி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
இதில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் காளை விடும் இடத்திற்கு விரைந்து சென்று காளைவிடும் விழாவை நிறுத்தி அஙகுள்ளவர்களை விரட்டி அடித்துள்ளனர். மேலும் தடையை மீறி காளை விடும் விழா நடத்திய முக்கிய நிர்வாகிகள் 5 நபர்கள் மீது கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆரணி அருகே தடையை மீறி காளை விடும் விழா நடத்திய 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது..