மயிலாடுதுறை : காளி கிராமத்தில் கதவின் பூட்டை உடைத்து 14 சவரன் நகைகள் கொள்ளை..
மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா காளி கிராமத்தை சேர்ந்தவர் 62 வயதான பாலகுரு. இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சீர்காழிக்கு சென்றுள்ளார்.
மீண்டும் திருமண நிகழ்வு முடிந்து தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல் நிலைய காவலர்கள் புகாரின் பேரில் பாலகுருவின் விட்டிற்கு விரைந்து வந்து சோதனை செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரை உதவியுடன் உடைத்து, உள்ளே நுழைந்து வீட்டின் இரு அறைகளிலும் உள்ள இரண்டு பீரோவில் இருந்த ஆரம், டாலர், நெக்லஸ், செயின், பிரேஸ்லெட், மோதிரம், தோடு உள்ளிட்ட 14 சவரன் தங்க நகைகளையும், 22ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள மணல்மேடு காவல் நிலைய காவலர்கள் ,நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அக்கம்பக்கத்தில் வீடுகள் இருக்கும் போதே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லவேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளோம்.
இருப்பினும் பொதுமக்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டு, தங்களின் உடமைகளை இழந்த பின்னர், வருந்தி பயன் இல்லை என்றும், வரும் முன் காத்துக்கொள்வதே சிறந்த ஒன்றாகும் என்றும், இது போன்ற திருட்டு நிகழ்வுகளை மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனி வரும் காலங்களிலாவது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லவேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.