சிறுமியை காதலித்த சிறுவன்... அடித்தே கொன்ற சிறுமியின் தந்தை! வேலூரில் பதட்டம்!
சிறுமியின் தந்தை ராஜகுரு (41), தன் மகனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி, பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார்
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி சிறுமி, சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடியதாக காவல் நிலையத்தில் சிறுமி வீட்டினர் புகார் அளித்திருந்தனர்.
காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தாலும் இருவரையும் சிறுமியின் வீட்டாரே தேடி கண்டுபிடித்துவிட்டனர். அதனையடுத்து கடந்த 24ஆம் தேதி சிறுவனை சாய்நாதபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனை மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறி கடந்த அக். 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி வீட்டாரே சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இத்தகவல் சிறுவன் வீட்டாருக்கு தெரியவர, சிறுமியின் தந்தை ராஜகுரு (41) சிறுவனை தாக்கியதாக கூறி சிறுவனின் தந்தை கார்த்தி பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த அக் 26ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜகுருவை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இச்சூழலில், “என் மகன் காதலித்த சிறுமி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். சிறுமியின் தந்தை ராஜகுரு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இருவரும் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தால் சிறுமி வீட்டார் என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆனால், என் மகன் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது ராஜகுரு உள்ளிட்டோர் தாக்கியதாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று சிறுவனின் தந்தை கார்த்தி வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த அக் 27ஆம் தேதி மற்றொரு புகாரை அளித்திருந்தார்.
இருப்பினும் காவல் துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த அக் 29ஆம் தேதி சிறுவனின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், செல்வகுமார் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று (நவ 06) சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், இக்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் 11 பேரையும் கைது செய்யக்கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர்.
வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனின் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேச்சை வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்