Crime: 18 வயது எம்பிபிஎஸ் மாணவி.. 20 வயது நண்பனின் துரோகம், வீடியோ, ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம்
Crime: மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 18 வயது மாணவியை, 20 வயது இளைஞர் ஒரு மாத காலமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மருத்துவக் கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
வடகிழக்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் தன்னுடன் பழகிய மருத்துவ கல்லூரி மாணவியை பார்ட்டி என்ற பெயரில் தனது அறைக்கு வரவழைத்த இளைஞர், ரகசியமாக குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் இளைஞர் அத்துமீறி நடந்துகொண்டதை, அவரது இரண்டு நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டி, அந்த மாணவியை முக்கிய குற்றவாளியான 20 வயது இளைஞர் ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்தது என்ன?
காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட மாணவி ஹரியான மாநிலம் ஜிந்த் பகுதியை சேர்ந்தவர் ஆவார். தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கி தனது மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் டெல்லியில் தங்கி போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும், அதே ஜிந்த் பகுதியை சேர்ந்த இளைஞர் அந்த மாணவியை பார்ட்டிக்கு வரும்படி கடந்த செப்டம்பர் 9ம் தேதி அழைத்துள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர் மற்றும் ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்பதால், அந்த பெண்ணும் அந்த பார்டிக்காக சென்றுள்ளார். அப்போது தான் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடந்துள்ளது. அந்த வீடியோவை காட்டி செப்டம்பர் மாதம் முழுவதும் பல்வேறு சூழல்களில் அந்த மாணவியை அவரது நண்பன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
ஆரம்பத்தில் வாழ்க்கை கெட்டுவிடுமோ? குடும்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தில், மிரட்டலுக்கு பயந்த மாணவி ஒருகட்டத்தில் நடந்த மொத்த உண்மையையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பக்கபலமாக இருந்ததோடு, கடந்த அக்டோபர் 2ம் தேதி காவல்துறையை அணுகி புகாரளிக்கவும் உதவியுள்ளனர்.
குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்..
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 3 குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸில் 24 வயது பெண் ஒருவர், நான்கு ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அந்த வழக்கில் ஒரு தொலைக்காட்சி நடிகர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் தான் ஒரு பார்ட்டிக்கு சென்றதாகவும், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு மதுபானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு மாணவியும் அதே பாணியில் பாலியல் பலாத்கார கொடுமையை எதிர்கொண்டுள்ளார்.





















