நெல்லையில் பரபரப்பு.... பாஜக பிரமுகர் கொலை; கைது பயத்தில் வாலிபர் தற்கொலை
கொலை வழக்கில் கைதாகலாம் என்ற அச்சத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன், இவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் ஜெகன் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்தனர். இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு என்பவர் தான் இந்த கொலைக்கு மூல காரணம் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெகன் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நேற்று உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அதே மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது மகன் ரஞ்சித் (26). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் திடீரென வீட்டில் சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய ரஞ்சித்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாஜக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் போலீசார் தன்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.. குறிப்பாக ஜெகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படும் திமுக பிரமுகர் பிரபுவுடன் தற்போது தற்கொலை செய்து கொண்ட ரஞ்சித் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
அதோடு பிரபு செல்லும் இடங்களுக்கு பெரும்பாலும் ரஞ்சித் அவருடன் சென்று வந்துள்ளார். இதனால் கொலை வழக்கில் போலீசார் நம்மை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே போல் கொலையுண்ட ஜெகன் உறவினர்களும், ரஞ்சித்துக்கு கொலையில் தொடர்பு இருப்பதாகவும் அவரது உடலை வெளியே எடுத்து வர விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ரஞ்சித் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கில் கைதாகலாம் என்ற அச்சத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பாஜக பிரமுகர் கொலை வழக்கில் அனிஸ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் திமுக பிரமுகர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.