ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
Bihar Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கிராம மக்கள் அடித்துக் கொன்று, தீயிட்டு எரித்த பயங்கர சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

Bihar Crime: மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நினைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
5 பேரை அடித்துக் கொன்ற கும்பல்:
பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் மாந்திரீக பணியில் ஈடுபடுவதாக சந்தேகப்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை, உள்ளூர் மக்கள் சிலர் சேர்ந்து அடித்துக் கொன்றதோடு, அவர்களது உடலையும்தீயிட்டு எரித்துள்ளனர். கிராமத்தில் அண்மையில் நடந்த சில மரணங்களுக்கு, அந்த குடும்பத்தின் நடவடிக்கைகளே காரணம் என கூறி இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குடும்பத்தினரின் அமானுஷ்ய சடங்குகளால் கிராமத்தில் புதிய நோய் பரவுவதாகவும் கருதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாபுலால் ஓரான், சீதா தேவி, மஞ்சீத் ஓரான், ரானியா தேவி மற்றும் தப்டோ மோஸ்மத் ஆகிய 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை சொல்வது என்ன?
கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தங்களது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளது. குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான தெளிவான தகவல் எதையும் வழங்க முடியாத நிலையில் இருப்பதாலும், தற்போது வரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தரபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போலீசார் மோப்ப நாயுடன் அந்த கிராமத்தில் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
தாக்குதலில் தொடக்கப் புள்ளி:
மூன்று நாட்களுக்கு முன்பு டெட்காமா கிராமத்தில் பாரம்பரிய சிகிச்சை மற்றும் சடங்குகளை (ஜார்-பூங்க்) மேற்கொண்டு வந்த உள்ளூர்வாசி ராம்தேவ் ஓரான் என்பவரின் மகன் திடீரென உயிரிழந்துள்ளார். அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குழந்தையும் நோய்வாய்ப்பட்டுள்ளது. இதற்கு கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என கருதியே, ஒட்டுமொத்த தாக்குதல் சம்பவமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகள் தொடர்பாக, பொதுமக்களை தூண்டிவிட முயன்றதாகக் கூறி, நகுல் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பூர்னியா காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வீட்டி செஹ்ராவத், இந்த சம்பவம் ஒரு பழங்குடி கிராமத்தில் நடந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த கொலைகள் ஜார்-பூங்க் மற்றும் தந்திர-மந்திரத்துடன் தொடர்புடையது என்றும் தெரிவித்துள்ளார். உடல்களை எரிப்பதற்கு முன்பு 5 பேரும் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
4 உடல்கள் மீட்பு:
எரிந்து சிதிலமடைந்த நிலையில் 4 உடல்கள் கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒரு உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பூர்னியா கொலைகள் தொடர்பாக நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, "இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவானில் நடந்த படுகொலையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சமீபத்திய நாட்களில், பக்சாரில் நடந்த படுகொலையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். போஜ்பூரில் நடந்த படுகொலையில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் எச்சரிக்கையாக உள்ளனர், முதல்வர் மயக்கமடைந்துள்ளார்" என்று சமூக வலைதளத்தில் சாடியுள்ளார்.





















