சாதி ரீதியாக இழிவாகப் பேசிய பிக்பாஸ் பிரபலம்..வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு!
பாலிவுட் நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான யுவிகா சௌத்ரி பட்டியலின மக்களை இழிவாகப் பேசியதால் அவர் மீது பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான யுவிகா சௌத்ரி பட்டியலின மக்களை இழிவாகப் பேசியதால் அவர் மீது பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை யுவிகா சௌத்ரி தனது சமூக வலைத்தளக் கணக்கில் பட்டியலின மக்களைப் புண்படுத்தும் வகையில் சாதியவாதத்தோடு பதிவிட்டுள்ளார்.
நடிகை யுவிகா சௌத்ரியின் சாதியவாதப் பதிவின் காரணமாக அவர் மீது பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நடிகை யுவிகா சௌத்ரியின் வழக்கறிஞர் அஷோக் பிஷ்னாய் இதுகுறித்து பேசுகையில், `எனது மனுதாரர் யுவிகா சௌத்ரி உயர் நீதிமன்றத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கு விசாரணையில் பங்கேற்றுள்ளார். தனது சமூக வலைத்தளக் கணக்கில் பட்டியல் சாதியினர் மீது சாதியவாத வசவுகளைப் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
ரஜாத் கல்சான் என்பவரி ஹரியானா மாநிலத்தின் ஹான்சி நகரக் காவல் நிலையத்தில் நடிகை யுவிகா சௌத்ரியின் மீது அளித்த புகாரின் பெயரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனது புகாரில், ரஜாத் கல்சான், நடிகை யுவிகா சௌத்ரி தனது சமூக வலைத்தளக் கணக்கு ஒன்றில் வெளியிட்டு வீடியோ ஒன்றில், பட்டியலின மக்கள் குறித்து இழிவாகவும், புண்படுத்தும் வகையிலும் அவர் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை எடுத்தது யுவிகா சௌத்ரியின் கணவர் ப்ரின்ஸ் நாருலா என்று கூறப்படுகிறது.
தனது வீடியோ வைரலாகி, இணையத்தில் எதிர்ப்புகளைப் பெறத் தொடங்கியதும், நடிகை யுவிகா சௌத்ரி ட்விட்டரில் மன்னிப்பு கோரியதோடு, தான் பயன்படுத்திய வசவுச் சொல்லின் அர்த்தம் தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். அவரின் கணவர் ப்ரின்ஸ் நாருலாவும் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
`எனது முந்தைய விடியோவில் நான் பயன்படுத்திய வார்த்தையின் அர்த்தம் எனக்குத் தெரியாது. நான் யாரையும் காயப்படுத்த எண்ணவில்லை. என்னால் அப்படி செய்யவும் முடியாது. நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்கள் அனைவரின் மீது அன்பு கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்’ என நடிகை யுவிகா சௌத்ரி பதிவிட்டுள்ளார்.
இந்தி மொழியில் `ஓம் ஷாந்தி ஓம்’ முதலான படங்களில் நடித்துள்ள நடிகை யுவிகா சௌத்ரி, இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாம் சீசனில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.