பொய் சொன்ன மகளை குத்திக் கொலை செய்த தாய்! நீதிமன்றம் தந்த தண்டனை என்ன?
பெங்களூரில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பொய் சொன்ன மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது பனசங்கரி. இந்த பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் பீமநேனி பத்மினி ராணி. 59 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
பொய் சொன்ன மகள்:
பத்மனி ராணியின் கணவர் மல்லேஸ்வரராவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஷாகிதி சிவப்பரியா என்ற மகள் இருந்தார். 17 வயதான அவர் கடந்தாண்டு அந்த மாநில 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் அவர் 95 சதவீத மதிப்பெண் எடுத்ததாக தனது தாய் பத்மினி ராணியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மையில் சாஹிதி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மேலும், அவர் பொதுத்தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தனது மகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தன்னிடம் பொய் கூறியதை அறிந்த பத்மினி ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். இதனால், இதுதொடர்பாக சாஹிதியிடம் ராணி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராணி மிகவும் அலட்சியமாகவும், ஆவேசமாகவும் பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ராணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.
குத்திக் கொலை செய்த தாய்:
இதனால், ஆத்திரமடைந்த பத்மினி ராணி தனது மகள் என்றும் பாராமல் சமையலறையில் இருந்த கத்தியால் அவளை குத்தி காெலை செய்துள்ளார். மேலும், தானும் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், போலீசார் விசாரணையில் பத்மனி ராணி கூறியதாவது, "எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் ஆகி 16 வருடங்களுக்கு பிறகு எனது மகள் பிறந்தாள். எனது கணவர் 2020ம் ஆண்டு இறந்த பிறகு நான் அவளுடன் மிகவும் பாசமாக இருக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் அதே பாசத்துடன் இருக்கவில்லை. நான் அந்த சமயத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தேன். ஆனால், அவள் அதே அன்புடன் பாசத்துடன் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அவள் எதிர்காலத்தில் மாறுவாள் என்று நம்பினேன்.
நடந்தது என்ன?
நான் எனது சகோதரர்களிடம் அவள் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், அவள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தேன். ஆனால், அவள் தேர்ச்சி அடைந்ததாக என்னிடம் பொய் கூறியிருந்தாள். ஒருவேளை அவர்களுக்கு உண்மை தெரிய வந்தால் அவமானத்தை சந்திக்க நேரிடும். அதனால், இறந்துவிடுவதே மேல் என்று கருதினேன்.
இதனால், சமையலறையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து அவள் உடல் முழுவதும் குத்தினேன். பின்னர், எனது கையையும் கத்தியால் அறுத்துக் கொள்ள முயற்சித்தேன். பின்னர், எனது கணவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் எங்களை மருத்துவமனைக்கு மீட்டுச் சென்றனர்."
இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்தார்.
ஆயுள் தண்டனை:
இந்த விவகாரத்தில் கடந்தாண்டு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மகளை கொலை செய்த வழக்கில் தாய் பத்மனி ராணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
பெற்ற தாயே மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்போது பெங்களூரையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

