ATM Theft: உள்ளாடையுடன் நீண்ட நேர முயற்சி; பலனிக்காததால் ஏடிஎம்ஐ திட்டிய கொள்ளையன்
ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய வீதியில் இந்த கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![ATM Theft: உள்ளாடையுடன் நீண்ட நேர முயற்சி; பலனிக்காததால் ஏடிஎம்ஐ திட்டிய கொள்ளையன் ATM Robbery Attempt Near Nadubalk, Tenkasi District Kerala Robber Arrested TNN ATM Theft: உள்ளாடையுடன் நீண்ட நேர முயற்சி; பலனிக்காததால் ஏடிஎம்ஐ திட்டிய கொள்ளையன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/08/c73956adb256cabefd19add337c39d021699432067167571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்காசி மாவட்டம் நடுபல்க் அருகே உள்ளது பஜார் வீதி. இங்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் செயல்படுகிறது. இந்த வங்கி ஏடிஎம் இல் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஏடிஎம் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தென்காசி குற்ற பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் இல் கொள்ளை முயற்சி நடந்தது உறுதியானது. அந்த காட்சிகள் மூலம் காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக சிசிடிவி காட்சியில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இரவு 10 மணிக்கு மேல் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஏடிஎம் உள்ளே நுழைகிறார். பின் அந்த இயந்திரத்தை பல வழிகளில் உடைக்க முயல்கிறார். கையை வைத்து மிஷினை தள்ளியும், உடலை வைத்து வலது புறமும், இடது புறமும் சென்று நகர்த்தியும் உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். நீண்ட நேரம் போராடியும் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாமல் திணறியதோடு சோர்ந்து போனார். பின் அங்கிருந்த கண்ணாடி சுவரில் சாய்ந்து கொண்டு கையை காட்டி ஏடிஎம் இயந்திரத்தை திட்டுகிறார். பின் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது. உள்ளாடையுடன் சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற அந்த நபர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டதோடு அந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அந்த நபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது. அதோடு அவர் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து ஏடிஎம்ஐ நோட்டமிட்டதோடு இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி நகர் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய வீதியில் இந்த கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)