பார்சலுக்கு காசு கேப்பியா? பரோட்டா மாஸ்டர் கொலை - தூத்துக்குடியில் மதுபோதையில் அட்டூழியம்!
தூத்துக்குடியில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கூடுதலாக காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
தூத்துக்குடியில் புரோட்டாக்கடையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட கடை ஊழியர்களை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில், பரோட்டா மாஸ்டர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள காமராஜ் நகரில் ராஜ் நைட் கிளப் என்ற பெயரில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவில் சுமார் 10 மணியளவில் அதிக மது போதையில் வந்த கற்குவேல், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர், பரோட்டா சாப்பிட வந்துள்ளனர். பரோட்டா சாப்பிட்டு முடித்ததும் பில்லை பெற்றுக்கொண்ட இருவர் காசு கொடுக்காமல் பைக்கில் கிளம்ப முயன்றனர். அப்போது கடையின் உரிமையாளரான கருப்பசாமி பார்சலுக்குக் காசு கேட்டுள்ளார்.
அதற்கு காசு தர முடியாது எனச் சொன்னதுடன், கருப்பசாமியை ஒருமையிலும் தகாத வார்த்தைகளைச் சொல்லியும் திட்டியுள்ளனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றவே, பரோட்டா மாஸ்டர் செந்தில்முருகன் உட்பட கடையின் ஊழியர்களான தேவராஜ், சாமுவேல் மற்றும் அப்பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வந்த பழனிமுருகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அவர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்யவே அந்த நான்கு பேரையும் கடையின் ஊழியர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இரவில் சுமார் 11.45 மணிக்கு கடையை அடைத்துவிட்டு செந்தில் முருகன் உட்பட ஊழியர்கள் 2 பேரும், ஆவின் பாலகம் நடத்தி வந்த பழனிமுருகன் ஆகியோரும் பைக்கில் வீட்டிற்குக் கிளம்பினர்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர். இதில், பரொட்டா மாஸ்டர் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவக்கும் கை, தலை, முதுகு, வயிறு, கால் ஆகிய இடங்களில் வெட்டு பட்டதில் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்பி பாலாஜி சரவணன், டி.எஸ்.பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இதுதொடர்பாக 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த கற்குவேல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 4பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தென்பாக்கம் காவல்துறையினர் நாலு பேரை தேடி வருகின்றனர். இதனிடையே இக்கொலையில் தொடர்புடைய சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கூடுதலாக காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.