Kanchipuram : “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அரசு அலுவலர்” அதிகாலையில் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!
Kanchipuram News : காஞ்சிபுரத்தில் நகராட்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் திடீர் சோதனை. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டு செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சியாமளா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு புகார் வந்துள்ளது.
புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு,ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்து உள்ள நிலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில் உள்ள சியாமளா வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சியாமளா வீட்டில் சோதனை செய்து வரும் சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : வருமானத்திற்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்த புகார் தொடர்பாக, தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். வரவு செலவு கணக்குகளையும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்து இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியாகி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் முழுமையான விசாரணைக்குப் பிறகு, அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நம்மிடம் தெரிவித்தனர்.
லஞ்சம், உழல் போன்ற செயல்பாடுகளால் வருமானத்தை தாண்டி அதிக அளவு சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்ந்து லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரால் சுற்றி வ்ளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கு ஒரு சான்றுதான் இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள். இருப்பினும், லஞ்சம் பெறுவாதும் அரசு பதவியில் இருந்துக்கொண்டு ஊழல் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதும் தொடர் கதையாகவே இருக்கிறது. லஞ்சம் வாங்க மாட்டேன், கையூட்டு பெற மாட்டேன் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட பலகையை கூட தங்கள் அலுவலகத்தில் வைத்துக்கொள்ள இதுபோன்ற அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எண்ணம் வரவில்லை. சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் அதனை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று பல அரசு அதிகாரிகள் சாமானியரை கூட விட்டு வைக்காமல அவர்களிடம் லஞ்சம் பெறுவதும் லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு அரசு சேவைகளை கொடுக்க மறுப்பது, காலம் தாழ்த்துவது என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது