சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அன்னபூரணி அரசு அம்மா, அங்கு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து வரும் மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இணையதளத்திற்கு பேட்டியளிக்கும் போது, தொடக்கத்திலேயே தனக்கு மிரட்டல் வருகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று இந்த புகார் தரப்பட்டுள்ளது. இதோ அந்த பேட்டி...
‛‛‛‛எல்லா மீடியாக்களும் என்னை மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பேட்டி தரவில்லை என்றால், நாங்கள் தவறாக தான் சித்தரிப்போம் என்றார்கள். என் குழந்தைகள் அன்பின் மிகுதியில் என்னை ஆதிபராசக்தி என்று அழைத்தார்கள். இனி என்னை அவ்வாறு அழைக்கமாட்டார்கள். அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என எனக்கு தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சை படுத்துகிறீர்கள். யாருடனும் தொழில் போட்டி போட நான் வரவில்லை. நான் வந்த நோக்கம் வேற. இங்கு ஆன்மிகம் தவறாக போய் கொண்டிருக்கிறது. நீங்க யார், உங்களை இயக்குவது எது, என்பதை உணர்த்தவே நான் வந்துள்ளேன்.
என்னைத் தேடி அம்மாவா, தாயாக தேடி வருபவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன். தவறான கண்ணோட்டத்தில் எனக்கு வாட்ஸ்ஆப் அனுப்பாதீங்க. நான் அந்த மாதிரி ஆள் இல்லை. சமுதாயத்தில் நடப்பதைப் போன்று என்னையும் நினைக்கிறீர்கள். அதை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. ரொம்ப ரொம்ப கொச்சை படுத்துறீங்க. என்னை தவறா பேசுவது, அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம். அரசு உடன் வந்ததை கொச்சைப்படுத்தி, மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசாதீங்க.
அரசு மர்மமான முறையில் இறந்ததாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூட என்னிடம் உள்ளது. அதை நான் வழங்க வேண்டிய இடத்தில் வழங்குவேன். இது தெரியாமல், என் மீது பழி போடுகிறீர்கள். இதோடு அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இனி ஆதிபராசக்தி என்ற பெயரை பயன்படுத்தமாட்டேன்; அம்மா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன்.
1 ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது இல்லை. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்துவேன். எனக்கு மிக மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது. நான் தலைமறைவாக இல்லை. என்னை யாரும் தேடவில்லை. செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு நான் போன் செய்து தெளிவுபடுத்திவிட்டேன்.
2 மாதத்திற்கு ஒரு முறை ஓட்டலில் தான் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். தொண்டாமுத்தூரில் எங்களுக்கான இடம் இருந்தும், அது புறநகரில் இருப்பதால், செங்கல்பட்டில் புதிதாக துவங்கலாம் என முடிவு செய்தேன். அந்த இடத்தை விற்க நினைத்தேன். சிலை இருப்பதால் அந்த இடத்தை வாங்க பலரும் முன்வரவில்லை. இனி அங்கு நாம் செல்லப்போவதில்லையே என்பதால், இனி அந்த சிலை தேவையில்லை என்பதால், நான் தான் அந்த சிலையை அகற்றக் கூறினேன். அந்த இடத்தை விற்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.
நானும் அரசும் தனித்தனி உடலாக இருக்கும் போது, அவ்வளவு அந்யோன்யமாக வாழந்தோம். அக்கம் பக்கத்தில் கேட்டுப்பாருங்கள். என்னோட மகளுக்கு கூட நான் தனி நேரம் ஒதுக்க முடியாது. என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு தான் நான் நேரம் ஒதுக்க முடியும். எனக்கு சுயநலம் இல்லை. சுயநலம் இருந்தால் ஆன்மிகத்தில் இருக்க முடியாது.
ஸ்டீபன் மூன்றாவது கணவர் என்கிறார்கள்; அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்த பெயரே எனக்கு தெரியாது. நான் அவதாரம், நான் ஆதிபராசக்தி, நான் கடவுள் என நான் எங்கும் சொல்லவில்லை. ஆன்மிகம் என்றால் என்ன என்பதை உணர வைக்க தான், நான் வந்தேன்.
ஆதிபராசக்தி என்கிற பெயரால் தான் இவ்வளவு பிரச்சனை. அதனால், இனி அந்த பெயர் எனக்கு தேவையில்லை. என்னை குழந்தைகளின்(பக்தர்கள்) அனுபவத்தை எல்லாம், ட்ரோல் செய்கிறார்கள். என் குழந்தைகள் என்னிடம், எப்போதும் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். போன் செய்து தான் என்னிடம் அவர்கள் பேச வேண்டும் என்பதில்லை; உணர்வுபூர்வமாக அவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். என்னை உணராத வரை என்னை தவறாக தான் பேச முடியும்.
அறிவு சார்ந்தவர்களுக்கு என்னால் புரியவைக்கவோ, உணர வைக்கவோ முடியாது. ஆன்மிகத்தை புரிந்தவர்கள், என்னை புரிந்து கொள்வார்கள். எனக்காக வேறு யாராவது ஆதரவு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அவர்களை கொச்சைபடுத்துவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எனவே நானே அனைத்துக்கும் பதில் தருகிறேன். எனக்கு ஆதரவாக யாரும் பேச வேண்டாம்.
என் உடலுக்கு நன்றி உணர்வாக இந்த ஆடையை நான் உடுத்துகிறேன். அதுக்கு நான் என்ன செய்ய முடியும். நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கார் வைத்திருக்கிறேன். தங்க வீடு வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஆடம்பரமா? நான் ஏதோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க இங்கு வரவில்லை. என்னுடைய வேலையை செய்ய தான் இங்கு வந்துள்ளேன். என்னைப்பற்றிய தவறான வீடியோக்களை அழித்துவிடுங்கள்!
என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.