Drug Seized: நாட்டை அதிரவிட்ட ஆபரேஷன் கருடா! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - ஆந்திராவில் பரபரப்பு!
ஆபரேஷன் கருடா திட்டத்தில் சர்வதேச அளவில் போதைப் மருந்து கடத்தலுக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
25 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல்:
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த கப்பல் கன்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25,000 கிலோ போதைப் பொருளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்குரிய கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, மற்ற பொருட்களுடன் போதைப் பொருளை வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கன்டெய்னரில் சுமார் 1000 மூட்டைகளில் சுமார் 25 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு மூட்டையிலும் 25 கிலோ போதைப் பொருள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பிரேசிலின் சாண்டோஸ் போர்ட்டில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த கடத்தில் யார் யார் ஈடுபட்டு உள்ளார்கள்? வேறு எதேனும் போதைப் பொருள் உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆபரேஷன் கருடா திட்டத்தில் சர்வதேச அளவில் போதைப் மருந்து கடத்தலுக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் நடவடிக்கைகள்:
முன்னதாக, கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாகிஸ்தான் படகைப் பயன்படுத்தி டெல்லி மற்றும் பஞ்சாபிற்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கடத்த முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
அந்த சோதனையில், 3,089 கிலோ சரஸ் (Charas) என்ற போதைப்பொருள், 158 கிலோ மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) மற்றும் 25 கிலோ மார்பின் (Morphine) ஆகியவற்றை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் 5 பேர் இருந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Big Breaking: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. தேசிய அரசியலில் பரபரப்பு!