பெங்களூரு: ஆண் நண்பரை காண வந்த ஏர்ஹோஸ்டஸ் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
பெங்களூருவில் 4வது மாடியில் இருந்து குதித்து ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூருவில் 4வது மாடியில் இருந்து குதித்து ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். வெள்ளி பின்னிரவு சனி காலை விடியும் தருவாய் ஒட்டிய நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் துபாயில் இருந்து தனது ஆண் நண்பரைக் காண்பதற்காக பெங்களூரு வந்ததாகத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், கோரமங்கலா பகுதியில் ரேணுகா ரெஸிடன்ஸியி இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளம் பெண் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான அர்ச்சணா எனத் தெரியவந்துள்ளது. அவர் பிரபல விமான நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது ஆண் நண்பர் ஆதேஷைக் காண்பதற்காக துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். ஆதேஷ் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் பெங்களூருவில் பணியாற்றி வந்துள்ளார். அர்ச்சணா, ஆதேஷ் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சணா அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். அவர் தாமாக குதித்தாரா இல்லை தள்ளிவிடப்பட்டாரா? தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று விசாரித்து வருகிறோம். ஆண் நண்பர் ஆதேஷும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அர்ச்சணா பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்னும் விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைகள்.. திடுக் புள்ளிவிவரம்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ஆவர். தற்கொலை செய்துகொண்டவர்களில் மாணவிகள்(5,693 பேர்) மற்றும் தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள்(4,246 பேர்) ஆகியோர் அடங்குவர். அதிலும், பெரும்பாலான இல்லத்தரசிகள் தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது(3,221 பேர்) என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம்(3,055 பேர்) மற்றும் மராட்டியம்(2,861 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் 13.9 சதவீதம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது, 13.2 சதவீதம் மத்தியப் பிரதேசம் மற்றும் 12.3 சதவீதம் மராட்டியத்தில் பதிவாகியுள்ளது. Also
தற்கொலை செய்து கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் (1,64,033 பேரில் 1,09,749 பேர்) திருமணமானவர்கள் என்பதும் 24.0 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள் (39,421 பேர்) ஆவர். 2021 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலை செய்துகொண்டவர்களில் விதவை 1.5 சதவீதம் (2,485 பேர்), விவாகரத்து பெற்றவர்கள் 0.5 சதவீதம் (788 பேர்) மற்றும் பிரிந்து தனியே வாழ்ந்தவர்கள் 0.5 சதவீதம் (871 பேர்) ஆவர். பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் - திருமணம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள்) மற்றும் கருவுறுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில், 18 - 30 வயதுக்குட்பட்டவர்கள்( 34.5 சதவீதம் பேர்) மற்றும் 30 - 45 வயதுக்குட்பட்டவர்கள்(31.7 சதவீதம் பேர்) ஆவர்.