தொழில் ஆசை காட்டி மோசடி! 110 சவரன் நகை, மிரட்டல்: அதிர்ச்சியில் பெண்!
திருமணம் செய்து கொள்வதாக கூறி தங்கநகை மற்றும் பணத்தை பெற்று, பெண்ணை தாக்கி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் கைது.

உணவகம் தொழில் துவங்குவதாக கூறி ஏமாற்றம்
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கணவரை பிரிந்து வசிக்கும் 33 வயது பெண் அண்ணாநகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு காப்பி கடை வைத்து நடத்திய போது , அறிமுகமான சிவா என்பவர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், உணவகத் தொழில் துவங்க இருப்பதாக கூறி அப்பெண்ணிடமிருந்து சிவா 110 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1 இலட்சம் வாங்கியுள்ளார்.
புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்
இந்நிலையில், பெண்ணிற்கு சிவா வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக இதே போன்று ஆசைவார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது பெண்ணை அவதூறாக பேசி கை மற்றும் காலால் தாக்கி இருவரும் பழகிய போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மேற்படி பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட கொரட்டூர் பகுதியை சேர்ந்த சிவா ( வயது 51 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி , ஆபாச புகைப்படங்கள் பகிர்ந்த நபர் கைது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணின் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைளதளத்தில் போலியான பல கணக்குகளை யாரோ தொடங்கி அதில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அப்பெண் குறித்து தவறான ஆபாச கருத்துக்களுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணபதி ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கணபதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















