Watch video: “கடனுக்கு சரக்கு இல்லை” - டாஸ்மாக் ஊழியரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த இளைஞர்!
”இசக்கி பீர் பாட்டிலால் கடை ஊழியரை தாக்கிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் வாலிபரை தற்போது காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்”
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ஏ.ஆர்.லைன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46), இவர் மகாராஜா நகர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு ஜெயக்குமார் மதுபான விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது மகாராஜநகரை சேர்ந்த இசக்கி (வயது 29) என்பவர் ஜெயக்குமார் பணிபுரியும் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றுள்ளார்.
அப்போது கடனுக்கு மது பாட்டில் வேண்டும் என இசக்கி கேட்டதாக தெரிகிறது. கடனுக்கு கொடுக்க முடியாது என ஜெயக்குமார் கூறி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இசக்கி 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மது வாங்கி விட்டு விற்பனையாளர் ஜெயக்குமாரின் செல்போனையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது, செல்போனை திரும்பப் பெறுவதற்காக கடைக்கு வெளியே வந்தபோது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் இசக்கி கையில் இருந்த பீர் பாட்டிலால் விற்பனையாளர் ஜெயக்குமாரை தாக்கியுள்ளார். இதில் ஜெயக்குமாரின் மண்டையில் பலத்த அடி விழுந்ததோடு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
கடனுக்கு சரக்கு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை ஊழியரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த குடிமகன் ( இளைஞர் ), சிசிடிவி காட்சியால் பரபரப்பு @abpnadu@SRajaJourno pic.twitter.com/JVV25Y7Onq
— Revathi (@RevathiM92) June 13, 2022
உடனடியாக விற்பனையாளர் ஜெயக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவருக்கு தலை மற்றும் காது பகுதியில் பலத்த அடி ஏற்பட்டதால் பத்து தையல்கள் போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரியவே இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அப்போது அதில் இசக்கி பீர் பாட்டிலால் கடை ஊழியரை தாக்கிய காட்சி பதிவாகி இருந்த நிலையில் அதனை கைப்பற்றி அதன் அடிப்படையில் இசக்கி என்பவரை தேடி வந்தனர், டாஸ்மாக் கடையில் நடந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் இசக்கி என்ற வாலிபரை தற்போது காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்கு ஆளான விற்பனையாளர் ஜெயக்குமாரின் மனைவி நெல்லை மாநகர காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்