Crime | ”வயசுதான் காரணம்” பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி! வழக்கில் புது திருப்பம்..
ஆரணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்பொழுது, சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரையிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தன் கணவனை கொன்றதாக ஒப்பு கொண்டார்.
இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தரமூர்த்திக்கும் செந்தாமரையின் அக்காவிற்கும்தான் முதலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அந்த நேரத்தில், செந்தாமரையின் அக்கா வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால், வேறு வழியின்றி மிகவும் சிறு வயதாக இருந்த செந்தாமரையை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
செந்தாமரை திருமணத்திற்கு பிறகு விருப்பமே இல்லாமல் சுந்தரமூர்த்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் வாழ்க்கை தொடர்ந்து கசப்பான சூழலை ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் செந்தாமரைக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மதியழகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடையில் அந்த பழக்கம் தகாத உறவாக மாற்றியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த உறவு குறித்து சுந்தரமூர்த்திக்கு தெரியவர, இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, செந்தாமரை மற்றும் மதியழகன் ஒன்று சேர்ந்து சுந்தரமூர்த்தி மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளனர். இதனால் இருவரும் கைதான நிலையில் இந்த வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், நீதிமன்றம் இவர்கள் இருவரையும் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து பள்ளிக்கரணை அருகே பதுங்கியிருந்த செந்தாமரை மற்றும் மதியழகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்