35 லட்சம் ஊர் பணத்தை திருடிய கும்பல்! குற்றவாளிகளை தெரிந்தும் கண்டுகொள்ளாத காவல்துறை - விளாத்திகுளத்தில் அவலம்
கிராம மக்கள் சூரங்குடி காவல் நிலையத்தில் பணத்தை திருடி சென்ற சாலமோன்ராஜ் உட்பட 5 பேர் மீதும் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஊர் பணம் 35 லட்சம்:
அக்கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுவான நிலப்பகுதியிலுள்ள வேலிக்கருவேல மரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை ஊர் பொது பணிகளுக்கு செலவு செய்து மீதமுள்ள பணத்தை அங்குள்ள "தேவேந்திர மஹால்" என்ற திருமண மண்டபத்தின் ஓர் அறையில் 7 சாவிகள் கொண்டு திறக்கப்படும் லாக்கரில் பத்திரமாக வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதேபோன்று, சமீபத்தில் ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட ஏலத்தொகையிலிருந்து கிடைத்த ரூ.40 லட்சம் பணத்திலிருந்து ரூ.5 லட்சத்தை மட்டும் ஊர் காரியத்திற்காக செலவு செய்து விட்டு மீதமுள்ள ரூ.35 லட்சம் பணத்தை லாக்கரில் வைத்துள்ளனர்.
35 லட்சம் திருட்டு:
இந்த நிலையில் நேற்றைய தினம் (09.12.2023) ஊர்த் தலைவர் சர்க்கரை என்பவரின் இல்லத் திருமண விழாவிற்காக கிராம மக்கள் அனைவரும் தூத்துக்குடி சென்றுள்ளனர். இதனால் கிராமத்தில் மக்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த யாக்கோபு தாஸ் என்பவரின் மகன் சாலமோன்ராஜ் மற்றும் 4 பேர் மதியம் சிவப்பு நிறக்காரில் வந்து கடப்பாரையை பயன்படுத்தி மண்டபத்தின் கதவுகள் மற்றும் லாக்கர் அறையை உடைத்து அங்கிருந்து ரூ.35 லட்சம் ஊர்ப் பொது பணத்தை லாக்கருடன் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த சிலர் தடுக்க முயன்ற போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கட்டி பக்கத்தில் வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டி காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
கண்டுகொள்ளாத காவல்துறை:
பட்டப்பகலில் 5 பேர் ஆயுதங்களை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அங்கிருந்தவர்கள் இது பற்றி கிராமத்தினருக்கு தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் சூரங்குடி காவல் நிலையத்தில் பணத்தை திருடி சென்ற சாலமோன்ராஜ் உட்பட 5 பேர் மீதும் நேற்றைய தினமே புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போதுவரை ரூ.35 லட்சம் ஊர்பணத்தை திருடியவர்களை பிடித்து பணத்தை மீட்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்த பாடில்லை என சூரங்குடி காவல் நிலைய போலீசார் மீதும் கிராமத்தினர் புகார் தெரிவிப்பதோடு உடனடியாக மாவட்ட காவல் துறையினர் திருடர்களைப் பிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.