Kolkata Crime: கொல்கத்தாவில் பயங்கரம்.... 7 வயது சிறுமி கடத்தி கொலை... சாக்கு மூட்டையில் சடலம்
சிசிடிவி காட்சியில் காணாமல் போன சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
கொல்கத்தாவில் 7 வயது சிறுமி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் வசிப்பவர் வீட்டிலிருந்து இருந்து சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்ததாக 32 வயது நபர் போலீசாரால கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீதர் ராய் சாலையில் வசிக்கும் 7 வயது சிறுமி நேற்று அதிகாலையில் இருந்து காணவில்லை என புகார் எழுந்தது. சிறுமியின் குடும்பத்தினர் நேற்று மதியம் 12 மணியளவில் தில்ஜாலா காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்த சிறுமி பற்றி தகவல் கிடைக்கவில்லை.
சிசிடிவி காட்சியில் காணாமல் போன சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட போலீசார் எந்த தடயமும் கிடைக்கவில்லை என கூறியது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, மாலையில் பக்கத்து வீடு பூட்டியிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அவர்கள் பூட்டை உடைத்து பார்த்தபோது, காணாமல் போன சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது மாடியில் இருக்கும் அலோக் குமார் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொல்கத்தா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த அலோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 7 வயது சிறுமியை கொலை செய்வதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தலை மற்றும் காதில் காயங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது குறித்த முழு விவரம் தெரியவரும் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் அலட்சியத்தால் தான் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களும் அக்கம் பக்கத்தினரும் தில்ஜாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ளது. பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல் நிலையத்தின் கேட் மற்றும் கதவை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.