திண்டிவனத்தில் போதை மாத்திரை ஊசி விற்பனை; சிக்கிய ஏழு இளைஞர்கள்... வெளியான அதிர்ச்சி தகவல்!
திண்டிவனம்: நண்பர்களுடன் இணைந்து போதை ஊசி, போதை மாத்திரை ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்துள்ளனர்

விழுப்புரம்: : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனையில் ஏற்பட்ட ஏழு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனத்தில் போதை மாத்திரை ஊசி விற்பனை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் போதை ஊசி, போதை மாத்திரை, கஞ்சா இருப்பதை கண்டு காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை வஸ்துக்கள் விற்பனை
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணையில் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன்(22) திருவள்ளூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு போதை பழக்கம் இருந்துள்ள நிலையில் திண்டிவனத்தில் உள்ள நண்பர்களான அரவிந்த், வசந்த் ஆகியோருக்கு போதை ஊசி, போத மாத்திரை வழங்கியுள்ளார். மேலும் சில நண்பர்களுடன் இணைந்து போதை ஊசி, போதை மாத்திரை ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்துள்ளனர். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை நண்பர்கள் மூலமாக திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
போதை ஊசி மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது
இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சரவணன்(22) அவனது நண்பர்களான அரவிந்த்(25). வசந்த்(23). சூர்யா(19). ஹரிஹரன்(28). ஆலன்(25). மணிகண்டன்(19) உள்ளிட்ட ஏழு பேரை மயிலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள், 6 போதை ஊசிகள், பத்து கிராம் கஞ்சா, ஆறு தொலைபேசிகள், ஒரு இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்த அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரை உள்ளிட்டவை அதிக அளவில் போலீசார் கையில் சிக்கி வருகிறது, மற்ற இடங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திண்டிவனத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















