Crime : கோவையில் பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர் கொலைக்கு பழிக்கு பழியாக நீதிமன்றத்திற்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக ஏராளமானோர் தினமும் வந்து செல்வது வழக்கம். நீதிமன்றத்திற்கு அருகே உள்ள கோபாலபுரம் 2-வது வீதியில் வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தின் பின்புற வாயில் இப்பகுதியில் அமைந்திருப்பதால், இந்த வழியாக நீதிமன்றத்திற்குள் பலர் சென்று வருவதுண்டு.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக வாய்தாவுக்கு வந்த 2 பேர் டீ குடிப்பதற்காக கோபாலபுரம் 2-வது வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டீ கடையில் இருந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் கழுத்தில் வெட்டப்பட்ட ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு வாலிபருக்கும் தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான நபர் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிவானந்தா காலனியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. இதனிடையே கொலை தொடர்பான ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், காயமடைந்த மனோஜை கொலையாளிகள் கத்தி வெட்டுவதும், அதில் நிலை தடுமாறி அவர் கீழே விழும் காட்சிகளும், இதனைத் தொடர்ந்து 4 பேரும் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கோவை ரத்தினபுரி, கண்ணப்ப நகர் பகுதிகளில் கோகுலுக்கும், குரங்கு ஸ்ரீராம் என்பவருக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த 2021 ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கோகுல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், பழிக்கு பழியாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் கொலை குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலகிரியில் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 5 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வதேப் பிரியன் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.