நண்பரைச் சந்திக்க 300 கிலோமீட்டர் பயணித்த பெண்.. நம்பவைத்து வன்கொடுமை.. 4 பேர் கைது..! நடந்தது என்ன?
கப்பேலா என்ற மலையாள திரைப்படத்தில், மிஸ்டு கால் மூலம் அறிமுகம் இல்லாதவரை காதலித்து அவரது ஊருக்கு செல்லும் பெண்ணை, அந்த நபர் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ள முயல்வார்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் டிக்டாக் செயலியில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜ்னேஷ் என்ற நபருடன் டிக்டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவருக்கும் இடையிலான நட்பு அதிகரித்ததை அடுத்து நேரில் சந்திக்க முடிவு செய்து இருக்கின்றனர். அஜ்னேஷை சந்திப்பதற்காக கொல்லத்தில் இருந்து கோழிக்கோட்டுக்கு செல்ல முடிவு செய்து உள்ளார் அந்த பெண். கடந்த 2 நாட்ககுக்கு முன் தன்னை சந்திக்க 300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்த பெண்ணை அஜ்னேஷ், கோழிகோட்டின் ஷிவயூர் என்ற பகுதியில் அமைந்து இருக்கும் தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு அந்த பெண்ணை அன்புடன் உபசரித்த அஜ்னேஷ், குளிர்பானம் கொடுத்து இருக்கிறார். அவரை நம்பி அதை அருந்திய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போதைப்பொருள் மற்றும் மது கலந்து அஜ்னேஷ் கொடுத்த அந்த குளிர்பானத்தை அருந்திய அந்த பெண் மயக்க நிலைக்கு சென்றார்.பின்னர் அதே விடுதியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்த அஜ்னேஷின் 3 நண்பர்கள் பெண் இருந்த அறைக்கு வந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதிக அளவிலான மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து 4 பேர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த பெண் மயக்கத்தில் இருந்து எழவில்லை. இதனை அந்த பெண்ணை அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவமனையில் இருந்த ஊழியரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து புகாரளிக்க காவல் நிலையம் சென்றார். கோழிக்கோட்டில் உள்ள சேவரம்பலம் தங்கும் விடுதிக்கு தன்னை கூட்டிச் சென்று அஷ்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்தார்.
இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்திட்டு வந்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அஜ்னேஷ் மற்றும் அவரது நண்பர் நிஜேஷை நேற்று கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஷூஹைப் மற்றும் பஹத் ஆகிய மேலும் 2 பேரையும் போலீஸ் கைது செய்து இருக்கிறது. கைது செய்யப்பட்ட 4 பேருமே கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களின் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை உதவி ஆணையர் சுதர்ஷன் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முகமது முஸ்தபா இயக்கத்தில் அன்னா பென், ரோஷன் மேத்திவ், ஸ்ரீநாத் பஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா திரைப்படத்திலும், மிஸ்டு கால் மூலம் அறிமுகம் இல்லாதவரை காதலித்து அவரது ஊருக்கு செல்லும் பெண்ணை, அந்த நபர் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்து இருப்பார். தற்போது அதே போன்றதொரு சம்பவம் நிஜத்தில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது