மகாராஷ்ட்ராவில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை: தலைவரும் கொல்லப்பட்டதாக தகவல்!
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் சுமார் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் சுமார் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு காவல்துறையினரும் தாக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக நாக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரவிந்திர நைதம், சர்வேஷ்வர் அத்ரம், மஹரு குட்மேதே, டிக்காராம் கடாங்கே ஆகிய நான்கு காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் அங்கித் கோயல், `இதுவரை உயிரிழந்த மாவோயிஸ்ட்களுள் 26 பேரின் உடல் கிடைத்துள்ளது. உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் அடையாளங்கள் மரும் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும்’ எனக் கூறியுள்ளார்.
கட்சிரோலி பகுதியின் வரலாற்றில் இதுவரை நீண்ட நேரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. காலை 6 மணிக்குத் தொடங்கிய மோதல் மாலை 4 மணி வரை நீடித்துள்ளது.
காவல்துறையின் தரப்பில் சி-60 கமாண்டோ படையைச் சேர்ந்த 100 காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டாலும், சுமார் 500 காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருந்தது குறித்த தகவல் காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொர்ச்சி தளம் உறுப்பினர்கள் இந்த மோதலில் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டை மாவோயிஸ்ட்கள் தரப்பில் இறுதிவரை எதிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கட்சிரோலி பகுதியின் வரலாற்றில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் இரண்டாவது மிகப்பெரிய என்கவுண்டர் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, ஒரே நாளில் இரு வெவ்வேறு பகுதிகளில் கட்சிரோலி காவல்துறையினர் சுமார் 40 மாவோயிஸ்ட்களைச் சுட்டுக் கொன்றனர். பொர்லா கஸ்னாசூர் பகுதியில் 34 பேரும், அஹேரி பகுதியில் 6 பேரும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போதைய என்கவுண்டர் சம்பவத்திற்குப் பிறகு, மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் மிலிந்த் தெல்தும்ப்டே உயிரிழந்தோரில் ஒருவராக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறை ஆணையர் அமித் கோயல், `தற்போதைய நிலவரப்படி, அது வெறும் வதந்தி மட்டுமே.. நவம்பர் 14 அன்று காலை உடல்கள் அடையாளம் காணப்படும் போது, இந்தச் செய்தியின் உறுதித்தன்மை வெளிவரும்’ என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சில தகவல்களின்படி, `காவல்துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மிலிந்த் தெல்தும்ப்டேவின் முன்னாள் பாதுகாவலர் ராகேஷைக் கைது செய்தனர். அவரை வைத்து உயிரிழந்தோரில் மிலிந்த் இருக்கிறாரா என்று அடையாளம் காணவுள்ளனர்’ என்று கூறப்படுகிறது.
தலித் ஆய்வாளரும், தற்போது பீமா கோரிகான் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்ப்டேவின் தம்பி மிலிந்த் தெல்தும்ப்டே ஆவார். இவர் மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் முதலான பகுதிகளுக்கு மாவோயிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக இருக்கிறார்.