பாலியல் தொழில் பெண்களை குறிவைத்த 2 தமிழர்கள் - ரூமில் மிருகத்தனமான செயல், சிங்கப்பூர் அரசு அதிரடி
Singapore Case: சிங்கப்பூரில் பாலியல் தொழில் பெண்களை மிரட்டி கொள்ளையடித்த, இரண்டு தமிழர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Singapore Case: சிங்கப்பூரில் பாலியல் தொழில் பெண்களை மிரட்டி கொள்ளையடித்ததாக, ஆரோக்கியசாமி டைசன் மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு தமிழர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டல் அறையில் வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கட்டிப்போட்டு மிரட்டி பணம் பறித்ததாக இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் முடிவில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமான நிலையில், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டதோடு, 12 பிரம்பு அடிகளும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுற்றுலா பயண திட்டம்
விசாரணையின் போது வெளியான தகவல்களின்படி, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி சுற்றுலா பயணிகளாக சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் அவர்களை அணுகி பாலியல் ரீதியான சேவை எதையேனும் பெற விரும்புகிறீர்களா? என கேட்டு, தொலைபேசி எண்கள் அடங்கிய அட்டை ஒன்றையும் வழங்கிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பாலியல் தொழில் பெண்களை அறைக்கு வரவைத்து அவர்களிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என, ஆரோக்கியசாமி முன்மொழிந்த திட்டத்திற்கு ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழில் பெண்களை கட்டிப்போட்டு பணம் பறிப்பு:
திட்டப்படி, அடையாளம் தெரியாத நபர் கொடுத்துச் சென்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, மாலை 6 மணியளவில் பெண் ஒருவரை தங்களது அறைக்கு வரவழைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கி கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து நகைகள், இந்திய மதிப்பில் ரூ.1.37 லட்சம் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் பேங்க் கார்ட்களையும் பறித்துள்ளனர்.
இதையடுத்து மற்றொரு ஹோட்டலுக்கு வேறு ஒரு பெண்ணை இரவு 11 மணிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது, வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை அறைக்குள் இழுத்துச் சென்று, சத்தம் போடாமல் இருக்க அந்த பெண்ணின் வாயை கைகளால் ராஜேந்திரன் பொத்தியுள்ளார். தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மீண்டும் வரும் வரை அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
போலீசார் அதிரடி நடவடிக்கை:
தனக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து இரண்டாவதாக பாதிக்கப்பட்ட பெண், மறுநாள் மற்றொரு நபரிடம் தெரிவிக்க, அவர் வாயிலாக ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனின் செயல் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவருமே தங்கள் சார்பில் வாதிட யாருமே இல்லாத சூழலில், கருணையுடன் குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு நீதிபதியிடம் மன்றாடியுள்ளனர்.
ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் பேசுகையில், ”என் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு மட்டுமே திருமணமாகியுள்ளது. எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் நாங்கள் இதைச் செய்தோம்" என்று தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் பேசுகையில், "என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாக இருக்கிறார்கள், அவர்கள் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளனர்.





















