அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
துபாயில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.5 கோடி மதிப்புடைய, 2.2 கிலோ கடத்தல் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
![அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. 2.2 kg of contraband gold worth Rs 1.5 crore smuggled from Dubai to Chennai by plane, seized at Chennai airport tnn அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/9f23345b680fdf0b87dc610a96f77b801726108275065739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுங்கச் சோதனையில் இல்லாமல், தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரகசிய தகவல்
துபாயிலிருந்து சென்னைக்கு, தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு , துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட விமான பயணிகளை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தீபக் (30) உட்பட இரண்டு ஊழியர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர்.
இரண்டு கிலோ தங்கம் பறிமுதல்
அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதோடு கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை சோதனை செய்தனர். அந்தக் கருவிகளுக்குள், 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அவைகளை அதிகாரிகள் எடுத்து பிரித்துப் பார்த்தபோது, தங்கப் பசைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மூன்று பார்சல்களிலும் 2.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி.இதை அடுத்து, ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உட்பட இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
தங்க பசை
அப்போது துபாயிலிருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர், இந்த தங்கம் பசை அடங்கிய பார்சல்களை கடத்திக் கொண்டு வந்து, விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து , அவர் மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்று விட்டார்.
அந்த கடத்தல் பயணி ஏற்கனவே, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தீபக்கிடம், கூறியிருந்ததால், தீபக் தனது வழக்கமான காலை பணி நேரத்தை, இரவு பணி நேரமாக மாற்றி அமைத்துக் கொண்டு, முன்னதாகவே பணிக்கு வந்து, கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் செல்ல முயன்றபோது பிடிபட்டார் என்று தெரியவந்தது.
இருவர் கைது
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், தீபக் உள்ளிட்ட இரு ஒப்பந்த ஊழியர்களையும், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில், 267 கிலோ கடத்தல் தங்கம்,டிரான்சிட் பயணிகளால் கடத்திக் கொண்டுவரப்பட்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், தற்போது அதே பாணியில் , மேலும் ரூ.1.5 கோடி மதிப்புடைய, 2.2 கிலோ கடத்தல் தங்கம், சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து செல்ல முயன்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)