‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!
2,117 ஏக்கர் நிலத்தை, ஒரே நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை ஒரே தனிநபருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்த புகாரின் பேரில் புதுக்கோட்டை சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை ஆகிய கிராமங்களில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை ஒரே தனி நபருக்கு முறைகேடாக புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதில் 2117 ஏக்கர் விவசாய நிலங்கள் கோவையை சேர்ந்த ஆதிதேவ் அக்கிரிஃபாம் என்ற நிறுவனத்தை சேர்ந்த அன்புராஜ் என்பவருக்கு நெல்லையை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் எழுதி கொடுத்திருப்பதாக, அங்குள்ள புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் பாஜகவினர் மற்றும் விவசாயிகள் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து போராடும் சார் பதிவாளரின் பதில் திருப்தி இல்லையென்றால் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழக பதிவுத் துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில் திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி மேற்பார்வையில் தூத்துக்குடி ஏஐஜி பால்பாண்டி உடனடியாக விசாரணை நடத்தினார். அதில் விவசாய நிலங்கள் முறைகேடாக ஒரு தனிநபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார் பதிவாளர் மோன்தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து பதிவுத்துறை திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி உத்தரவிட்டார். மேலும், முறைகேடாக ஒரே நபர் பெயருக்கு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. புதுக்கோட்டை சார் பதிவாளர் பொறுப்பை, ஏரல் சார் பதிவாளர் வள்ளியம்மாள் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2,117 ஏக்கர் நிலங்கள் ஒரே நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டிசன் படத்தில் தான் அத்திப்பட்டி காணாமல் போகுமா, முறைகேடாக பத்திரப்பதிவு செய்தாலும் கிராமம் மட்டுமல்ல விவசாய நிலத்தோடு விவசாயிகளும் காணாமல் போகக்கூடிய நிலைதான் இருக்கு எனக்கூறும் கிராமத்தினர், இதற்கு துணைபோன அதிகாரிகளையும், மூளையாக இருந்த கோயம்புத்தூர் செந்தில் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும் என்கின்றனர் கிராமமக்கள்.