Twitter Trending : விடுதி வார்டன் கொடுமைப்படுத்தியதால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை : மதம் மாறச்சொல்லியதால் தற்கொலையா? என்ன நடந்தது?
விடுதி வார்டன் கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் மாணவியின் மரண விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரில் பள்ளி விடுதியின் மகளிர் வார்டனின் கொடுமை தாங்க முடியாமல் பூச்சிமருந்தை குடித்ததாக சொல்லப்படும் மாணவி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருவதால் சமூகவலைதளங்களில் மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியின் விடுதியின் வார்டனாக சகாயமேரி என்பவர் ( வயது 62) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி மாணவி வாந்தி எடுத்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மைக்கேல்பட்டிக்கு நேரில் வந்த முருகானந்தம், மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை அழைத்து வந்துள்ளார். மேலும். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்களிடம் அந்த் மாணவி“ தனக்கு வயிற்றுவலி இல்லை என்றும், தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டேன்” என்றும் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
இதையடுத்து, மாணவிக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. விடுதியின் வார்டன் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், அந்த வார்டனால் தனக்கு மிகவும் கடுமையான மன அழுத்தம் தினமும் ஏற்பட்டதாகவும், விடுதியில் உள்ள அறைகள் அனைத்தையும் தன்னை சுத்தம் செய்யச்சொல்லி பிறர் முன்னால் அவமானப்படுத்தியதாகவும், அந்த அவமானம் தாங்க முடியாமலே மருந்து குடித்ததாகவும் கூறியுள்ளார். மாணவியை காப்பாற்ற தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து, விடுதி வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சூழலில், மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பேசியுள்ள வீடியோவில் பள்ளி நிர்வாகம் சார்பில் உயிரிழந்த மாணவியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், மதம் மாறாவிட்டால் இங்கு தங்க முடியாது என்று கொடுமைப்பத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், மதம்மாறக் கூறி பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியின் தந்தையிடம் கூறியதாகவும், அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்த காரணத்தாலும் மாணவி லாவண்யாவை தொடர்ந்து விடுதி வார்டன் கொடுமைப்படுத்தியதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். இந்த நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், தற்போது மாணவியின் மரணம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்